தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை.. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் சொன்ன வார்த்தை!
சென்னை: தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் ஜெ நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதன்பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை கழகமாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன்.
பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தேன். தொண்டர்களின் எண்ணத்தையும் அமித்ஷாவிடம் கூறினேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதையே அமித்ஷாவுடன் வலியுறுத்தினேன். எம்ஜிஆர் தொண்டர்களின் இயக்கமான அதிமுக எப்போதும் பிளவுபடாது. ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
அதேபோல் தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவில்லை. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் அவருடன் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக ஒன்றிணைய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார்.
தற்போது தனிக்கட்சி தொடங்குவதாக நான் சொன்னேனா என்று ஓபிஎஸ் திடீரென கேள்வி எழுப்பி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட காலம் கணிந்து வருகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications