Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிள்ளையையும் கிள்ளிவிட்டு... ஓபிஎஸ்சின் மூவ் எரிச்சலில் எடப்பாடி டீம்

Subscribe to Oneindia Tamil

அதிமுகவில் ஓபிஎஸ் அழையா விருந்தாளியாகவே காலம் தள்ளும் நிலையில், அவரது சமீபத்திய மூவ்கள் எடப்பாடி டீமை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்பதை நேற்றைய மா.செ.க்கள் கூட்டத்திலும் காண முடிந்தது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக ஒருபுறம் சசிகலாவையும் ஆதரிப்பதுபோல் தோற்றத்தை அளித்து மறுபுறம் சீரியசாக வழிகாட்டு குழு பற்றி பேசுவது எடப்பாடி டீமை கடும் எரிச்சலடைய வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் ஓடுகிறது.

ஒன்றுமில்லாமல் ஆக்கிய சசிகலா

ஒன்றுமில்லாமல் ஆக்கிய சசிகலா

ஜெயலலிதா மறைந்த நேரத்தில் கட்சி பொதுச் செயலாளர் இல்லாத குழப்பத்தில் ஆட்சியை காக்க ஓபிஎஸ் முதல்வராக முடிசூட்டப்பட்டார். அதன் பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கினர். நாமே ஏன் முதல்வராகக்கூடாது என சசிகலா நினைத்த நிலையில் ஓபிஎஸ் மூலம் அதை அறிவிக்க வைத்தனர்.

தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ்

தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ்

திடீரென ஒருநாளிரவு தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் வீரர்போல எல்லோர் முன்னும் தோற்றம் அளித்தார். ஆனாலும் பதவியை விரும்பும் கூட்டம் சின்னம்மா என நின்றது. முதல்வர் பதவி ஏற்கும் முன் சிறைத்தண்டனை உறுதியாக ( அது எப்படி நிகழ்ந்தது என்பதெல்லாம் சின்ன குழந்தைக்கும் தெரியும்) கூவத்தூரில் செங்கோட்டையனை பின்னுக்கு தள்ளி எடப்பாடி பவ்யமாக முதல்வர் ஆனார்.

ஆட்டம் மாறியது அனைத்தும் மாறியது

ஆட்டம் மாறியது அனைத்தும் மாறியது

பள்ளிக்கூடத்தில் டீச்சர் இல்லாவிட்டால் ஆடும் பிள்ளைகள் போல் இனி நாம் யாருக்கு பயப்பட வேண்டும் என அனைவரும் ஒன்று கூடினர். அங்கதான் ட்விஸ்ட் வச்சான் மேலே இருக்கிறவன், யாராலும் மதிக்கப்படாத 11 எம்.எல்.ஏக்களை வைத்து தடுமாறிக்கொண்டிருந்த ( விட்டால் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருப்பார்) ஓபிஎஸ் கட்சிக்குள் திணிக்கப்பட்டு ஒரே நாளில் ஒருங்கிணைப்பாளர் ஆனார். அமைதிப்படையில் பவ்யம் காட்டும் சத்யராஜை விட பவ்யம் காட்டிய எடப்பாடி மணிவண்ணனை சத்யராஜ் கவிழ்ப்பதுபோல் அனைவரையும் கவிழ்த்து முதல் ஆளானார். இந்த ராஜதந்திரத்தில் டிடிவியே ஆடிப்போனார். ஓபிஎஸ்சும் அமைதியாக இருந்தார்.

 அழையா விருந்தாளி ஓபிஎஸ்

அழையா விருந்தாளி ஓபிஎஸ்

என்னதான் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என்றாலும் அதிமுகவில் அழையா விருந்தாளியாகவே இருந்தார் ஓபிஎஸ். தமிழகத்தில் நினைத்ததை நடத்த ஏற்படுத்தப்பட்ட காட்சிக்கு ஏற்றப்படி அனைவரும் ஆட்டிவைக்கப்பட்டனர். நினைத்ததை சாதித்தது மேலிடம். அப்பத்தை பங்குபோட குரங்குக் கையில் கொடுத்தது போல் கட்சியின் பஞ்சாயத்துகள் சம்பந்தமில்லாதவர்களால் பேசி பஞ்சாயத்து செய்யப்பட்டது. இப்படியே 4 ஆண்டுகள் ஓடியது. 4 ஆண்டுகளில் ஓபிஎஸ்சை நம்பி வந்த ஒருவருக்கும் பலனில்லை கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன்,. மைத்ரேயன், நட்ராஜ், என பலரும் சும்மா இருந்தே ஓய்ந்து போயினர்.

அணிமாறியவர்கள் தப்பித்தார்கள்

அணிமாறியவர்கள் தப்பித்தார்கள்

ஓபிஎஸ் அணி ஆட்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதேப்போன்று ஒருநாள் ஒரு கூட்டத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பேசிய மைத்ரேயன் மிரட்டப்பட்டார். ஓபிஎஸ் புன்சிரிப்புடன் கடந்துப்போனார். அணி மாறியதால் கே.பி.முனுசாமி தப்பித்தார். மைத்ரேயன் மனம் நொந்து மயக்கமா கலக்கமா பாடாத குறை. மதுசூதனன் தன் ஆதரவாளர் ராஜேஷை எடப்பாடியிடம் ஒப்படைத்தார் கடைசி காலத்தில் குழப்பத்திலேயே மறைந்தும் போனார். இப்படி அனைத்திலும் எடப்பாடி ஆதரவாளர்களே இருக்க அவ்வப்போது வீரம் காட்டி ஓய்ந்துப் போனார் ஓபிஎஸ்.

தேர்தல் நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்

தேர்தல் நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்

கடைசியாக ஓபிஎஸ் தேர்தல் நேரத்தில் தனது ஒருங்கிணைப்பாளர் பிரம்மாஸ்த்திரத்தை கையில் எடுத்தார். நான் தான் முதல்வர் வேட்பாளர் அல்லது பொதுச் செயலாளர் என்று ஆட்டத்தை ஆரம்பித்ததாக அப்போது அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. என்ன நடந்ததோ ஓபிஎஸ் சட்டென்று அடங்கிப்போனார். ஆதரவாளர்கள் சோர்ந்துப் போனார்கள். இரு தரப்பிலும் போட்ட சண்டையை பாஜக சரியாக பயன்படுத்திக்கொண்டது. வலுவாக அதிமுக வெல்லும் இடங்களை கேட்டு நின்றார்கள். இருவரும் தங்களுக்குள்ளே போட்டி போட்டதில் வலுவான திமுக அணி வென்றது. அதன் பின்னரும் தோல்விக்கான காரணத்தை உணரவே இல்லை.

சசிகலா பக்கம் போய்விடுவேன் பயமுறுத்தி காரியம் சாதித்த ஓபிஎஸ்

சசிகலா பக்கம் போய்விடுவேன் பயமுறுத்தி காரியம் சாதித்த ஓபிஎஸ்

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்து அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சொன்னப் பின்னரும் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் ஓயவில்லை. இரண்டு பெரும் சமூகங்களாக கட்சி பிரிந்து நிற்பதைப்பார்த்து சசிகலாவும் களத்தில் குதிக்க ஓபிஎஸ் மெல்ல காய் நகர்த்த ஆரம்பித்தார். ஒருபுறம் சசிகலாவிடம் மென்மையான போக்கு, மறுபுறம் தென் மாவட்டத்து முன்னாள் அமைச்சர்களை, தலைவர்களை மெல்ல இழுக்கும் போக்கை ஆரம்பித்தார். இடையிடையே ஒற்றுமையாக இருக்கிறோம் எனக்காட்ட ஓபிஎஸ்-இபிஎஸ் ஒன்றுபட்ட அறிக்கை வரும்.

இரு தலைமையால் குழப்பத்தில் தொண்டர்கள்

இரு தலைமையால் குழப்பத்தில் தொண்டர்கள்

இரு தலைமை இரண்டு கோஷ்டி காரணமாக கட்சி தடுமாற, மறுபுறம் சசிகலா ஒரு ரோல் எடுக்க ரெய்டுக்குப்பின் மவுனமான வேலுமணி, தங்கமணி ஆதரவும் இல்லாமல் எடப்பாடி மவுனமாக இங்கே தான் ஓபிஎஸ் மெல்ல தன் ராஜ தந்திரத்தை ஆரம்பித்துள்ளார். மெல்ல ஒரு தலைமையின் கீழ் கட்சி என ஆதரவாளர்கள் மூலம் கோஷம் மறுபுறம் கட்சிக்குள் உள்ள உட்கட்சிப்பூசலை மெல்ல பயன்படுத்த தொடங்கியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய கூட்டத்தில் ஆரம்பித்த சிக்கல்

நேற்றைய கூட்டத்தில் ஆரம்பித்த சிக்கல்

அவைத்தலைவர் தேர்வு, உள்ளாட்சித்தேர்தல், சசிகலா செயல்பாடு நான்காவதாக திமுகவுக்கு எதிராக போராட்டம் என்று அஜெண்டாக்களுடன் கூட்டம் கூடியது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியா நடக்கும் என்கிறார் ஒரு அதிமுக விசுவாசி. முதல் மூன்று அஜெண்டாக்களும் கிடையாது நான்காவது அஜெண்டா அறிவிப்பாக படிக்கப்படும் என்றார்.

அவைத்தலைவர், ஸ்டேரிங் கமிட்டியில் கைவைத்த ஓபிஎஸ்

அவைத்தலைவர், ஸ்டேரிங் கமிட்டியில் கைவைத்த ஓபிஎஸ்

அவைத்தலைவர் தேர்வுக்கு செங்கோட்டையன் ஆசைப்பட்டு மூவ் பண்ண மூத்தத் தலைவர் என்கிற முறையில் நடுநிலையாளர்களும் அதற்கு ஆதரவு தெரிவிக்க எடப்பாடி அணி ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இங்குதான் மெல்ல காய் நகர்த்திய ஓபிஎஸ் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கொங்குமண்டல கோட்டைக்குள் விரிசலை ஏற்படுத்தலாம் என்பது அவர் கணக்கு.

இருக்கவே இருக்கிறார் என் ஆதரவாளர்

இருக்கவே இருக்கிறார் என் ஆதரவாளர்

செங்கோட்டையனை ஏற்க மாட்டீர்களா இருக்கவே இருக்கிறார் என் புது ஆதரவாளர் எம்ஜிஆர் காலத்து எம்.எல்.ஏ வில்லிவாக்கம் எம்ஜிஆர் ஜேசிடியாரை அவைத்தலைவராக்குங்கள் என்று காய் நகர்த்த எதிர்முனை தமிழ்மகன் உசேனை வைக்க, முடிவில்லாமல் போனது கூட்டம். இதில் செங்கோட்டையனை முடுக்கிவிட்டதால் ஓபிஎஸ்க்கு 2 லாபம், செங்கோட்டையன் வந்தாலும் லாபம், ஜேசிடி வந்தாலும் லாபம்.

அடுத்த ராஜதந்திரம் ஸ்டேரிங் கமிட்டி

அடுத்த ராஜதந்திரம் ஸ்டேரிங் கமிட்டி

கட்சியில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரே தலைமைத்தான் தீர்வு என சிலர் ஆரம்பிக்க அதிலும் முட்டல் மோதல் கிளம்ப எதுக்கு பிரச்சினை வழிகாட்டுக்குழுவை 18 ஆக உயர்த்துங்கள் என்று ஒரு பிட்டை ஓபிஎஸ் போட்டுள்ளார்.இதன்மூலம் எடப்பாடி அதிகாரம் குறைக்கப்படும் தனது ஆதரவாளர்களை வழிகாட்டுக்குழுவில் உள்ளே திணித்து வலுவாக்கி கொள்ளலாம் என்கிற எண்ணமும் காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சசிகலாவுக்காக எடப்பாடி தலைமை ஏற்றோம் என்ன சுகம் கண்டோம்

சசிகலாவுக்காக எடப்பாடி தலைமை ஏற்றோம் என்ன சுகம் கண்டோம்

இன்னொரு வகையிலும் ஓபிஎஸ் தரப்பு காய் நகர்த்துகிறது என்கின்றனர் வட மாவட்ட அதிமுகவினர். சசிகலாவை பகைத்து எடப்பாடி தலைமை ஏற்றோம் என்ன சுகம் கண்டோம் கொங்கு மட்டுமே வாழ்கிறது. வடக்கும், தெற்கும் தேய்கிறது என்கிற வாதம் வைக்கப்படுகிறதாம். இதில் சிக்காதவர் சிவி.சண்முகம் மட்டும் தான். அவருக்கு சசிகலா எதிர்ப்பு காரணமாக எடப்பாடி அணியுடன் உள்ளார் என்கின்றனர்.

செயற்குழுவுக்கு தள்ளி வைக்கப்பட்ட மோதல்

செயற்குழுவுக்கு தள்ளி வைக்கப்பட்ட மோதல்

இவை எதற்கும் முடிவு காணப்படாத நிலையில் 4 மணி நேரம் நடந்த கூட்டம் கவுரவமாக செயற்குழு கூட்டமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த முடிவும் எட்டப்படாது என இரு தரப்புக்கும் தெரியும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, இரண்டு மணிகள் வீட்டில் ரெய்டு, விஜயபாஸ்கர்கள் வீட்டில் ரெய்டு காரணமாக எடப்பாடியின் நிலை இறக்கத்தில் உள்ளது. அதை ஓபிஎஸ் பயன்படுத்தி சரியான நேரம் பார்த்து காய் நகர்த்துகிறார். இது எங்கு போய் முடியுமோ? ஆனால் அதிமுக பலவீனப்படப்போவது மட்டும் நிச்சயம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+