உச்சந்தலையில் சுத்தியல்.. டெல்லி வைத்தியம் எப்டி? இந்த ‘கேப்’புல திருந்துங்க.. சீண்டும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : சில நரிகள் கூடி எடப்பாடி பழனிசாமி தலையில் வைத்திருக்கும் நெருப்பை கிரீடம் என இனியும் நம்பி அவர் மோசம் போவதை விட்டுவிட்டு திருந்துவதும் வருந்துவதும் நல்லது என ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விளாசி வருகிறார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, எடப்பாடி பழனிசாமியின் திட்டங்கள் அனைத்தும் நிரந்தரமாக முறியடிக்கப்படும் என்பதற்கான தொடக்கமே என மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.

எடப்பாடியை அட்டாக் செய்யும் மருது
ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலைத் தொடர்ந்து ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். அந்தவகையில் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசரம் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும், 'நமது அம்மா' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் ஈபிஎஸ்ஸை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி உச்சந்தலையில் சுத்தியல்
மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தன்னை தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்கும் இடிஅமீன் எடப்பாடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவரது உச்சந்தலையில் அடிக்கப்பட்ட சுத்தியல் அடியாகவே பார்க்கப்படுகிறது. காரணம் நியாய தர்மத்தை அதிமுகவில் உள்ள ஒருவருக்கும் யோசித்துப் பார்க்க கூட தருணம் தந்து விடக்கூடாது என்னும் எடப்பாடியின் அதிகார அவசர வெறியை 50 நாட்கள் மாட்சிமை மிக்க நீதிமன்ற ஆறப்போட்டிருப்பதன் மூலம் அது எடப்பாடியின் பித்துப் பிடித்த அபகரிப்பு வியாதிக்கான வைத்தியமாகவே பார்க்கப்படுகிறது.

கொள்கையற்ற கொள்முதல்
தான் செய்யும் ஜனநாயகத்திற்கு புறம்பான அரசியல் அபகரிப்பை எதிர்க்கும் எல்லோரையும் நீக்கிவிட்டு அண்ணா திமுகவை தனது முறைகேட்டு பணத்திலான முதலீட்டு சொத்தாக்க முயற்சிப்பதையும், அனைத்துக்கும் விலை வைத்து வலை வீசும் எடப்பாடியின் ஏலக்கடையில் சிக்கியிருக்கும், மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரிடமும் ஒரு கொள்கையற்ற கொள்முதல் மட்டுமே நடக்கிறது என்பதை, மக்களுக்கும் குறிப்பாக கழகத்தின் கள்ளம் கபடமில்லா தொண்டர்களுக்கும் உணர்த்துவதற்குமான வாய்ப்பாக நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

போலியாக திரட்டப்படும் கூட்டம்
பதவிக்கும் பணத்துக்கும் தன்னை விற்பனை செய்து கொள்ளும் சுயநலமிகளும், பொருளாதாரத்தை கொண்டு போலியாக திரட்டப்படும் கூட்டத்தின் பக்கம் தலையை காட்டுவதே தங்களுக்கு அரசியல் ஆதாயம் தரும் என நம்பும் முதுகெலும்பு இல்லாதவர்களால் எடப்பாடிக்கு ஒரு தற்காலிக சுகத்தை மட்டும் தான் தரமுடியும் என்பதோடு மிக விரைவில் எடப்பாடியின் முறைகெட்ட செயல்கள் அனைத்தும் நிரந்தரமாக முறியடிக்கப்படும் என்பதற்கான தொடக்கமே தீர்ப்பாகும்.

சில நரிகள்
எனவே நரிகள் சில கூடி எடப்பாடி பழனிசாமி தலையில் வைத்திருக்கும் நெருப்பை கிரீடம் என இனியும் நம்பி அவர் மோசம் போவதை விட்டுவிட்டு திருந்துவதும் வருந்துவதும் நல்லதாகும். அதற்கான வாய்ப்பாக இந்த இடைவேளை காலத்தை இடையூறு எடப்பாடி பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications