ஜெயக்குமார் வீடு பேலஸ்.. பிறக்கும்போதே கோடீஸ்வரரா?- ஓபிஎஸ் டீம் கவுன்ட்டர் அட்டாக்.. முற்றும் மோதல்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தை 'வசூல்ராஜா' என விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் புகழேந்தி.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் ஓபிஎஸ், அவர் வசூல் ராஜா ஓபிஎஸ் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் ஈபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார்.
தனது அமைச்சரவை சகாவையே ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்ததோடு, ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தியது பன்னீர்செல்வம் தரப்பை கொந்தளிக்கச் செய்தது.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நீங்கள் சொல்லும் ஊழல் நடக்கும்போதெல்லாம் நீங்கள் கூடவே தானே இருந்தீர்கள். அப்போ எல்லோரும் ஊழல் செய்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீண்டிய ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "ஓ.பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள், வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கிக் கொண்டவர் தான் ஓபிஎஸ். உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல வசூல்ராஜா ஓபிஎஸ். சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். ஆனால், அந்த உத்தமனை மக்கள் நம்ப தயாராக இல்லை. வாயெல்லாம் பொய். அவர் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரைப் போல மக்களை நம்ப வைக்கிறார்." என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

கொதித்துப்போன ஓபிஎஸ் டீம்
மேலும், அதிமுக ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில், ஓபிஎஸ் வகித்த துறையில் மட்டுமே ஊழல் புகார் வந்தது ஏன்? ஓபிஎஸ் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்பவர். கட்சியைக் கூட காட்டிக் கொடுக்க தயங்காதவர் என விமர்சித்திருந்தா. ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு ஓபிஎஸ் தரப்பை கொதிக்கச் செய்தது. இந்நிலையில், ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.

கோவிலை ஏன் பூட்டுனீங்க?
செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்ந்த கோவில் தானே அதிமுக தலைமைக் கழகம். கோவிலை ஏன் பூட்டி வைத்தீர்கள்? கிராமப் பகுதிகளில் கோவிலை பூட்டி வைத்தால் என்ன நடக்கும்? உதைதான் கிடைக்கும். எதற்காக எல்லா வாசல்களையும் பூட்டி வைத்தீர்கள்? ஓபிஎஸ் என் வீடு அது, நான் ஏன் திருட வேண்டும் என்று அழகாகச் சொல்கிறார். அந்த அலுவலகத்தில் திருடுவதற்கு என்ன மிச்சம் வைத்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் கொள்ளையடித்து முடித்துவிட்டீர்கள்.

பேலஸ் மாதிரி வீடு
ஊழல் செய்தவர், உலகத்திலேயே பெரிய பணக்காரர் ஓபிஎஸ் என்று ஜெயக்குமார் பேசுகிறார். டுமீல் தெருவில் ஒரு இடத்தில் தொடங்கி, அடுத்த தெரு வரை ஜெயக்குமாரின் வீடு தாஜ்மஹால் பேலஸ் மாதிரி இருக்கும். பிறக்கும்போதே உங்க அப்பா என்ன கோடீஸ்வரரா? எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினீர்கள்?

எல்லோரும் ஊழல் செஞ்சீங்களா?
திட்டமிடலிலேயே ஓபிஎஸ் கொள்ளை அடித்துவிட்டதாகச் சொல்கிறார் ஜெயக்குமார். பிளான் போடும்போதே எப்படி ஊழல் செய்ய முடியும்? அப்படி ஊழல் செய்தார் என்றால் ஏன் அப்போதே சொல்லவில்லை. அது நடக்கும்போதெல்லாம் நீங்கள் கூடவே தானே இருந்தீர்கள். எடப்பாடி பழனிசாமி தானே முதலமைச்சர்? அப்போ எல்லோரும் ஊழல் செய்தீர்களா?

கிரிமினல் குற்றவாளி
ஜெயக்குமார் மீதே எத்தனை வழக்குகள் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஒருவரை பிடித்து அரைநிர்வாணமாக்கி தாக்கியது, நில அபகரிப்பு வழக்கு, வாக்கி டாக்கி ஊழல் என பழ வழக்குகள் இருக்கின்றன. ஜெயக்குமாரின் சொந்தக்காரர்களே அடுத்தடுத்து அவர் மீது நில அபகரிப்பு புகார் சொல்கிறார்கள். நீங்களே ஒரு கிரிமினல் குற்றவாளி. இன்னொருவரைப் பார்த்துச் சொல்லலாமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications