அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்..நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு..அவசர வழக்காக நாளை விசாரணை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. இதையடுத்து, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆயத்தமானது.
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை நேற்று அக்கட்சி தலைமை வெளியிட்டது. அதிமுகவின் தேர்தல் நடத்தும் அலுவலர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். அதில், அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

வேட்புமனு பரிசீலனை
இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 (இன்று), 19-ந்தேதிகளில் (நாளை) மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ந்தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்கு எண்ணிக்கை 27-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள், தலைமைக்கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுவதால் அவரே கட்சியின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாக உள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் முடிவை ஓபிஎஸ் தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது.

வழக்கு நிலுவையில் இருக்கும் போது
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம் தரப்பு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதை கடுமையாக விமர்சித்தது. ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எதிர்பாராத வகையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்தலை அறிவிப்பது அதிமுகவை கொச்சைப்படுத்துவது போலாகும். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் புகார்கள் இருக்கும் போது தேர்தல் நடத்தலாமா?" என்று சாடியிருந்தார்.

நாளை விசாரணை
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விடுமுறை தினமான நாளை இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார். இதையடுத்து, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நாளை இந்த மனு விசாரணைக்கு உள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கில் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்பதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு தொற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications