‘கேட்’ போட்டாச்சே! கோர்ட் சொன்ன விஷயத்தால் உற்சாகத்தில் ஓபிஎஸ் டீம்.. எடப்பாடிக்கு விழுந்த வேகத்தடை!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமையாளரை தற்போது முடிவு செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியையும் ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்புகளே வந்துகொண்டிருந்த சூழலில், தற்போது அதிமுக அலுவலக சொத்துகள் ஈபிஎஸ் வசம் ஒப்படைக்காதது ஓபிஎஸ் தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமை யாருடையது என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கின் முடிவில் தான் தெரியவரும் சைதாப்பேட்டை நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சூறையாடல்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழு நடத்தியது. அந்தப் பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகுந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் கடுமையாக கல்வீச்சில் ஈடுபட்டு தாக்கிக்கொண்ட நிலையில், அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.

அதிமுக அலுவலக பொருட்கள்
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அதிமுக அலுவலக வன்முறை காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, பின்னர் கோர்ட் உத்தரவின் படி எடப்பாடி பழனிசாமி தரப்பின் வசம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பால் சூறையாடப்பட்ட பொருட்கள் சைதாப்பேட்டை நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றம் திட்டவட்டம்
நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை கேட்டு ஈபிஎஸ் தரப்பின் சிவி சண்முகம் வழக்கு தொடுத்திருந்தார். நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என்று ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கமும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமையாளரை தற்போது முடிவு செய்ய முடியாது என சைதாப்பேட்டை நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பு உற்சாகம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பிரதான சிவில் வழக்கின் தீர்ப்பிற்கு பிறகே உரிமையாளரை முடிவு செய்ய முடியும் என சைதை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், தற்பொது அதிமுகவுக்கு சொந்தமான பொருட்கள் அவர்களது தரப்புக்கு வழங்கப்படாததால் ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்தக் கருத்தின் காரணமாக, அதிமுக பிரதான வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications