Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே அபத்தம்.. வேலையை பறிக்கும் அரசாணை.. விழியற்றோரின் வாழ்வுக்காக முதல்வரிடம் ஹென்றி வைத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்னிறுத்தி, தமிழக முதல்வருக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. விழியற்றவர்களின் வாழ்விற்கும், பயிற்சி திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள இந்த கடிதம், தமிழக மக்களின் கவனத்தையும் திருப்பி வருகிறது.

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையானது, தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில்கூட, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி விவகாரத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார் அப்பேரவையின் தலைவர் ஹென்றி.

tn government stalin disabled people

பள்ளி ஆசிரியர்: அதாவது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜீவா என்பவர், தன்னுடைய பள்ளியின் ஆசிரியர்களையும், மாணவிகளையும் தரக்குறைவாக பேசுவதாகவும், சக ஆசிரியர்களை பணி செய்ய விடாமலும் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனவே, அப்பள்ளியின் மோசமான கட்டமைப்பையும், பள்ளியின் நிலைமை, ஆசிரியர்கள், மாணவர்களின் பரிதாப நிலைமையையும் சுட்டிக்காட்டியிருந்த டாக்டர் ஹென்றி, இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கே நேரடியாக புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது, திருவள்ளூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அரசாணை: இப்போது, அடுத்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவை.. விழியற்றவர்களின் வாழ்விற்கும், பயிற்சி திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:

"பார்வையற்றோருக் கான புத்தகம் கட்டுநர் பயிற்சியினை அரசு தொடர்ந்து செயல்படுத்திடவும், அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளர்.

தொடர்ந்து ஹென்றி அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: "தங்களது சீரிய தலைமையின் கீழ் அனைவருக்குமான திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், தமிழக அரசால் பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டினை கவனத்தில் கொண்டு, பூவிருந்தவல்லியில் பார்வை குறைபாடு உள்ளவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு அரசினர் தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது.

சுயமரியாதை: அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை சேலம் விருத்தாச்சலம் மற்றும் புதுக்கோட்டை போன்ற மேற்கண்ட 6 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு அச்சகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வை திறன் குறைபாடுடைய பணியாளர்கள் புத்தகம் கட்டுநர் பணியில் நியமிக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதன் வாயிலாக இவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிபெற்று, இதன் மூலம் இவர்கள் இச்சமூகத்தில் பிறரை சாராமல், சுய சம்பாத்தியத்தில் மன நிம்மதியுடன் வாழ்வதற்கும் தன்னை சார்ந்தவர்களை வாழ வைப்பதற்கும் வாய்ப்பைப் பெற்று, சுயமரியாதையுடனும் சுய கௌரவத்துடனும் வாழ்கின்றனர்.

சான்றிதழ்: நல்ல உடல் திறன் கொண்ட பணியாளர்களுக்கு ஈடாக தங்களது பணிகளில் சிறப்பாக செயல்பட்டதின் காரணமாக எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் அவர்களால் பாராட்டப்பட்டு சான்றிதழும் மற்றும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்ட நிகழ்வை இத்தருணத்தில் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மேலும் அச்சக துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கண்ட அச்சகங்களை நேரில் பார்வையிடாமலும் மற்றும் கள ஆய்வு செய்யாமலும் தவறான புள்ளி விவரங்ககளையும், கருத்துக்களையும் தங்களது துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பார்வைத்திறன்: இதன் அடிப்படையில், தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை / மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பூவிருந்தவல்லி பார்வை திறன் குறையுடையோருக்கான அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் பயிற்றுவிக்கப்படும் பார்வையற்றோருக்கான புத்தகம் கட்டுநர் பயிற்சினை நிறுத்தம் செய்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை கடந்த 20.09.2024 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண்.21/2024 பார்வை திறன் குறைப்பாடு உள்ளவர்களிடையே சுய சம்பாத்தியத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்ததோடு, பேர் அதிர்ச்சியையும், மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கான புத்தகம் கட்டுநர் பயிற்சினை நிறுத்தம் செய்வதற்கான காரணங்கள் குறித்து பொது நூலக இயக்குனர், எழுது பொருள் மற்றும் அச்சுத் துணை ஆணையர், மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் ஆகியோர்கள் தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு தவறான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

நவீன ரக இயந்திரங்கள்: பொது நூலகத்துறையானது நவீன காலத்திற்க்கேற்ப மின் நூலகங்களாக மாறி வருவதினாலும் மற்றும் அனைத்து பணிகளுக்கும் நவீன ரக இயந்திரங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதின் காரணமாகவும் வரும் காலங்களில் புத்தகம் கட்டுனர் மற்றும் நூல் கட்டுநர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேவை குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்ட சில காரணங்கள் ஏற்று கொள்ள கூடியவைகளாக இருந்தாலும், பல காரணங்கள் மிகவும் அபத்தமானவைகளாக உள்ளன.

எனினும், தற்பொழுது அசுர வளர்ச்சி அடைந்து வரும் அறிவியல் வளர்ச்சி காரணமாக தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இயந்திர சக்தியின் பயன்பாடு அதிகரித்து அதன் விளைவாக மனித சக்தியின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இச்சூழலில், நல்ல உடல் தகுதி உள்ள மனிதர்களே தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடுமையாக போராட வேண்டியிருக்கிறது.

புதிய வேலை வாய்ப்புகள்: இத்தருணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், பார்வை திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளின் நலனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பரிசீலனை செய்து, இந்த சமூகத்தில் அவர்களும் சுயமரியாதையுடனும், சுய கவுரவத்துடனும் பணியாற்றிடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உரிய திறன் மேம்பாடு பயிற்சிகளையும், அதற்குரிய புதிய வேலை வாய்ப்புகளையும், அனைத்து துறைகளிலும் உருவாக்கிட வழிவகை செய்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்: தமிழக முதல்வருக்கு ஹென்றி விடுத்திருக்கும் இந்த கோரிக்கையானது, மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. காரணம், மாற்றுத்திறனாளிகள் துறையின் இந்த அரசாணையானது, மேலோட்டமாக பார்த்தால் , புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறுத்துவதாக மட்டுமே தோன்றும். ஆனால், இது உண்மையிலேயே அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறுகிறார்கள்..

மாற்றுத்திறனாளிகளால் மற்றவர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதைப்போல குறிப்பிட்டிருப்பது, தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என்பதுடன், மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பையும் பறித்துவிடும் என்பதால், இந்த அரசாணையை திரும்ப பெற அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

நடவடிக்கை எடுக்குமா? விழியற்றவர்களின் வாழ்விற்கும், பயிற்சி திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வருக்கு டாக்டர் ஹென்றி எழுதியிருக்கும் இந்த கடிதம், தமிழக மக்களின் கவனத்தையும் சேர்த்தே குவித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+