கவாச் சிஸ்டம் பொருத்த வழியில்ல.. இதுல புல்லட் ரயில் விடுறாங்களாம்.. பாஜகவை பங்கமாக கலாய்த்த ப.சிதம்பரம்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், சமீபத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் புல்லட் ரயில்கள் விடப்படும் என்று கூறியிருந்தது. இதனை முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டிருந்தார். 'மோடியின் உத்தரவாதம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை 'சங்கல்ப் பத்ரா' என்று அழைக்கப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு அறிவிப்புகளில், புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

அதாவது, நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புதிய புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இப்போது வரை நாட்டில் எங்கும் புல்லட் ரயில் ஓடவில்லை. முதல் புல்லட் ரயிலுக்கான வழித்தடம் மும்பை-அகமதாபாத் வரை உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் 2026ல் இந்த வழித்தடத்தில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் புல்லட் ரயில் அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளார்.
அதாவது, "அகமதாபாத் டூ மும்பைக்கு புல்லட் ரயிலை இயக்க ரூ.1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். ஒரேயொரு ரயிலுக்கு மட்டும் இவ்வளவு செலவாகும். இந்த திட்டம் பெரும் பணக்காரர்களுக்கானது. விமானத்தில் போக வேண்டும் எனில் 2 மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையம் செல்ல வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருக்கும். இதே புல்லட் ரயில் எனில், புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்னர் சென்றால் போதுமானது. எனவே புல்லட் ரயில் பெரும் பணக்காரர்களின் வசதிக்காக, ரூ.1.10 லட்சம் கோடி செலவில் இயக்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்திற்காக பெருமளவு ஜப்பானிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் புல்லட் ரயில் விடப்போவதாக கூறியிருக்கிறார்கள். எப்போது விடுவார்கள்? அதற்கான பணம் இருக்கிறதா? ஜப்பான் போன்ற நாடுகளிடம் கடன் வாங்குவதற்கு ஒப்பந்தம் ஏதும் போடப்பட்டிருக்கிறதா?
இந்தியாவில் ரயில் விபத்துக்களை தவிர்க்க கவாச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்டு 10-12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த கவாச் தொழில் நுட்பத்தை ரயில் என்ஜினில் பொருத்தினால், ஒரு ரயில் மற்றொரு ரயில் மீது மோதாது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாதுகாப்பு அம்சத்தை, நாடு முழுவதும் ஓடும் 13,169 பயணிகள் ரயில்களில் வெறும் 63 ரயில் என்ஜினுக்கு மட்டுமே பொருத்தியிருக்கிறார்கள்.
ரயில் என்ஜின்களை போலவே ரயில் நிலையங்களிலும் இந்த கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட வேண்டும். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் இதில் வெறும் 134 ரயில் நிலையங்களில்தான் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஆக, சாமானிய மக்களின் உயிரை காக்கும் தொழில்நுட்பத்தை வெறும் 63 ரயில்களுக்கு பொருத்திவிட்டு, ஒரு புல்லட் ரயிலுக்காக ரூ. 1.10 லட்சம் கோடியை செலவழிக்கிறார்கள் என்றால் யாருக்காக இந்த அரசு இருக்கிறது?
'ஏழைகளுக்காக இந்த அரசு இல்லை, பெரும் பணக்காரர்களுக்காக இந்த அரசு இருக்கிறது' என்கிற எங்களது குற்றச்சாட்டை இந்த அம்சம் உறுதி செய்திருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications