’மேலிடம்’ போட்ட ஆர்டர்.. ஜகா வாங்கிய எடப்பாடி! பினாமி பாமகவுக்கு அதிமுக ஆதரவு? ப.சிதம்பரம் அட்டாக்.!
சென்னை: நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இந்நிலையில் பாஜக மேலிட உத்தரவு காரணமாகவே அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி இருப்பதாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.
இந்தியா முழுவதும் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீசி வந்த தேர்தல் புயல் ஓய்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார் நரேந்திர மோடி. தமிழகத்தில் முதற்கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மே ஜூன் என கடந்த காலங்கள் மிகவும் பரபரப்பானதாகவே அரசியல் கட்சிகளுக்கு இருந்தது.

ஒரு வழியாக தேர்தல் நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் திமுக பெருவெற்றி பெற்றது. தொடர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சி இந்தியா கூட்டணிக்கு தோல்வியை தந்தாலும் பெரிய அளவிலான வெற்றி அவர்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் தமிழகம் கால் வைத்திருக்கிறது. மீண்டும் ஒரு அரசியல் புயல் தமிழகத்தை சூழ்ந்து இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்தார்.
இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளன. அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது. இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறார் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இதுவரை சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த தேர்தலில் புகழேந்தி அதிமுக வேட்பாளரை விட வெறும் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்ததால் தற்போது ஆளும் கட்சியாக திமுக இருந்தாலும் அதிமுக போட்டியிடும் போது களம் சூடாகவே இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு அதிமுகவினரை மட்டுமல்லாது மற்ற அரசியல் கட்சியினரையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது.
மிகப்பெரிய அரசியல் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியமான அதிமுக தேர்தலில் போட்டியிடாத நிலையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2016 தேர்தலில் தனித்து களம் கண்ட பாமக வேட்பாளர் அங்கு சுமார் 40,000 வாக்குகளை பெற்றிருந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் வெறும் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக கூட்டணிக்கு உதவுவதற்காக பாஜக மேலிட உத்தரவு காரணமாகவே அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி இருப்பதாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளரின் (பாமக) தேர்தல் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் வகையில் மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளது என்பதற்குத் தெளிவான சான்று இது.
இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பினாமி (பாமக) மூலம் போரிடுகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் மகத்தான வெற்றியை அதிமுக உறுதி செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். அதிமுக பின் வாங்கிய முடிவுக்கு சமூக வலைதளங்களில் திமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிமுகவினர் சிலரே எடப்பாடி பழனிசாமியின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications