இருக்கிறது 10 சீட்டுதானே! எத்தனை பேருக்கு தர முடியும்.. நக்மா அதிருப்தி குறித்து ப சிதம்பரம் பதில்
சென்னை: ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்காததால் தனது அதிருப்தியை நடிகை நக்மா தெரிவித்த நிலையில் அது தொடர்பான கேள்விககு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள்.
இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

6 எம்பி பதவி காலி
அந்த வகையில் தமிழகத்தில் 6 எம்பி பதவிகள் காலியாகின்றன. அதில் திமுக 3 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுக இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. திமுக சார்பில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக வேட்பாளர்கள்
அது போல் அதிமுக சார்பில் நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸுக்கு திமுக சார்பில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு சீட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி போட்டனர். இதையடுத்து மாநிலங்களவையில் ப சிதம்பரத்தின் பங்களிப்பு தேவை என காங்கிரஸ் தலைமை கருதியது.

விதியை மீறி சீட்
இதனால் காங்கிரஸ் காரிய கூட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்டுதான் என ராகுல் கறார் கூறியிருந்தாலும் ப சிதம்பரம் விஷயத்தில் அவருடைய பங்களிப்பு, நேர்த்தியான பதிலடி எல்லாம் பாஜக அரசுக்கு தேவை என்பதால் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலிருந்து ப சிதம்பரம் முதல் முறையாக மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

வேட்புமனுதாக்கல்
இதையடுத்து இன்று அமாவாசை தினம் என்பதால் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். எமகண்டம் பகல் 12 மணிக்கு முடிவடைந்தவுடன் ப சிதம்பரம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனிடையே மகாராஷ்டிராவில் இருந்து தான் மாநிலங்களவைக்கு செல்வோம் என ஆசையாக இருந்த நக்மாவுக்கு ஏமாற்றமே விஞ்சியது.

18 ஆண்டுகள் வீணாச்சு
இதனால் தனது ட்விட்டரில் தனது அதிருப்தியை நக்மா வெளிப்படுத்தியிருந்தார். அதில் அவர் 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதிலும் தனக்கு மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். மேலும் மாநிலங்களவைக்கு அனுப்புவதாக சோனியா காந்தி வாக்களித்தும் அதை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவித்திருந்தார்.

ப சிதம்பரத்திடம் கேள்வி
இந்த நிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்த ப சிதம்பரத்திடம், நக்மாவின் அதிருப்தி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ப சிதம்பரம் கூறுகையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுவதும் 10 ராஜ்யசபா சீட்டு மட்டுமே இருக்கிறது. அதை 10 பேருக்கு மட்டும்தானே கொடுக்க முடியும். நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்.

நான் எதுவும் சொல்ல முடியாது
நீங்கள் (செய்தியாளர்கள்) சொன்னதுகட்சி அறிவித்த வேட்பாளர்களைக் காட்டிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். நானும் ஒரு வேட்பாளர்தான். இது கட்சி எடுத்த முடிவு, நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை என தெரிவித்தார் ப சிதம்பரம்.












Click it and Unblock the Notifications