கேஸ் விலை குறைப்பது சரி.. தேர்தலுக்கு பிறகு கூட்ட மாட்டோம் என உறுதியளிக்க தயாரா? ப.சிதம்பரம் காட்டம்
சென்னை: கேஸ் சிலிண்டர் விலையை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் உயர்த்த மாட்டோம் என பாஜக வாக்குறுதி அளிக்கட்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நாடு தழுவிய அளவில் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை கட்டமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை ராகுல் காந்தி வெளியிட்டார்.

இளைஞர் உரிமை என்ற பெயரில் 5 வாக்குறுதிகளை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
1. 30 லட்சம் மத்திய அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
2. ஆன்லைன் டெலிவரி பணிகளில் வேலை செய்பவர்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்கப்படும்.
3. தேர்வு வினா தாள்கள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படும்.
4. புதிதான நிறுவனங்களுக்கான முதலீடாக ரூ.5000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
5. பட்டதாரி மற்றும் பட்டய படிப்பு நிறைவு செய்த இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையுடன் ஓராண்டு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
ஆகிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 5 வாக்குறுதிகள் பற்றி விளக்கினார் ப.சிதம்பரம். தேர்தல் அறிக்கையில் இந்த 5 கேரண்டிகள் இடம்பெறும், இதை வைத்து பிரச்சாரம் செய்வோம் என்றார்.
தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், "வேலையின்மை என்பது மிகப்பெரிய கொடுமையாக இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசுவது கிடையாது. வாரம் வாரம் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி வேலையின்மை பற்றி விலைவாசி உயர்வு பற்றி எதுவும் பேசுவதில்லை.
இளைஞர்களுக்காக 5 கேரண்டிகளை தந்திருக்கிறோம். இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக, தங்களின் குடும்பத்தின் உயர்வுக்காக இந்த அற்புதமான 5 வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.100 குறைப்பதாக அறிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், "தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறைப்பார்கள். பிரதமர் மோடி பதவிக்கு வருவதற்கு முன்னால் பெட்ரோல் 50 ரூபாய், டீசல் 40 ரூபாய் என்று சொன்னார். குறைத்திருக்கிறார்களா?
ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்றார். போட்டிருக்கிறார்களா? தேர்தலுக்கு 100 ரூபாய் குறைப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு உயர்த்த மாட்டோம் என்று சொல்லட்டும். தேர்தலுக்காக குறைப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களுக்குப் பயன்படட்டும். தேர்தலில் வென்ற பிறகு மீண்டும் விலையை உயர்த்த மாட்டேன் என பாஜக் வாக்குறுதி அளிக்கட்டும்" எனக் கூறியுள்ளார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications