சாதி, பணபலத்தை உடைத்த விஜய்.. தவெக வெற்றியால் நெகிழ்ந்த இயக்குநர் பா. ரஞ்சித்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தவெகவின் இந்த வெற்றிக்கு நாடு முழுவதும் இருந்து விஜய்யை வாழ்த்தி வருகிறார்கள். இயக்குநர் ரஞ்சித், சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது என்று விஜய்யை வாழ்த்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடினர். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டினார்கள். தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

விஜய்க்கு வாழ்த்து
தவெக வேட்பாளர்கள் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல முன்னாள் அமைச்சர்க்ள அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளனர். விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்து என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறியுள்ளார். திரைத்துறையில் இருந்தும் பல பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, சிவகார்த்திகேயன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த் அஜித்குமார் ஆகியோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித் பெருமிதம்
சினிமா இயக்குநர் பா ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications