சட்டம் ஒழுங்கு சரியில்லை; போதையின் பிடியில் தமிழகம்! திமுக மீது பாரிவேந்தர் பாய்ச்சல்!
சென்னை: கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாரிவேந்தர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இந்த முறை பாஜக கூட்டணி சார்பில் அதே பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அரசியல் விமர்சகர்களான ரவீந்திரன் துரைசாமி, கலை, ஆசீர்வாதம் ஆச்சாரி போன்றோர் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஏற்கெனவே கூறியுள்ளனர்.
சில தனிப்பட்ட அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் பாரிவேந்தர் வெற்றி பெறுவார் என்றே சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். வேப்பந்தட்டை என்ற ஊரில் பேசிய அவர், " கடந்த 5 ஆண்டுகளில் பாரிவேந்தர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். அதைத்தவிர்த்து மேலும் பல்வேறு திட்டங்களைச் செய்துள்ளார்.
100% வாக்குறுதி நிறைவேற்றம்!
பாரிவேந்தர் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான நட்பை வைத்துள்ளார். ஆகவே அவர் வெற்றி பெற்றால், மேலும் பல நல்ல திட்டங்களைப் பெரம்பலூருக்குக் கொண்டு வருவார். ஆகவே அவருக்குத் தாமரை சின்னத்தில் வாக்களித்து இந்த முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இவரைத் தொடர்ந்து குளித்தலையில் பிரச்சாரம் மேற்கு கொண்ட பாரிவேந்தர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று குற்றஞ்சாட்டினார். அதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை:
பிரச்சாரத்தின் போது பேசிய பாரிவேந்தர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மது, போதை அதிகமாக ஆகிவிட்டது. தமிழ்நாடு அரசுக்கு என்ன செய்வது? மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களைத் தருவது? என்றே தெரியவில்லை.
பாஜகவைப் பார்த்தாலே ஆளும் கட்சிக்குப் பயமாக உள்ளது. ஆகவேதான் தாமரை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டுப் போனால் வன்முறையில் இறங்கி, அவர்களைத் தாக்குகிறார்கள். வெட்டுகிறார்கள்.
வாக்குக் கேட்டால் போடலாம் அல்லது போடாமல் போகலாம். அதற்காக ஒருவரை வெட்டுவார்களா? தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. வன்முறை அதிகரித்து விட்டது. ஆகவே மக்களாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும்.
திமுகவைத் திரும்ப ஆளவிட்டால், அவ்வளவுதான். குடியை முதலில் ஒழிக்க வேண்டும். ஒருவன் குடித்து விட்டாலே மிருகமாகிவிடுகிறான். அவன் மனிதனாக இருக்க முடியாது. அவன் மூளை செயலிழந்து விடுகிறது. ஆகவேதான் குடியை ஒழிக்க டாஸ்மாக்கை மூடச் சொல்கிறோம். அதை மட்டும் திமுக அரசு செய்ய மறுக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக மோடி நாட்டை ஆண்டு கொண்டுள்ளார். இது மத்திய ஆட்சிக்கான தேர்தல். அதைப் புரிந்து கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும். டெல்லியில் மோடியுடன் சேர்ந்து 70 மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.
இந்தப் பத்தாண்டுகளில் அந்த 70 அமைச்சர்களில் ஒருவர் மீது கூட ஊழல் புகார் இல்லை. கொள்ளை அடித்தார் என்றோ, லட்சம் வாங்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மின் கட்டணம்; வீட்டு வரி உயர்வு:
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் நிலைமை எப்படி உள்ளது? மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். அத்தனை அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்களுக்குத்தான் திரும்பத் திரும்பத் தெரியாமல் ஓட்டுப் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
அவர்கள் ஊழல் பணத்தில் வெற்றி பெற்று வந்த உடன் வீட்டு வரி, மின் கண்டனம், குடிநீர் வரி, பத்திரப் பதிவுக் கட்டணம் என அனைத்தையும் ஏற்றி விட்டார்கள். விலைவாசி அதிகரித்து விட்டது.
இதற்கு எல்லாம் காரணம் திமுக. ஆகவே அவர்களுக்கு நீங்கள் ஒரு பாடம் புகட்ட வேண்டும். மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தாமரைக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications