பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்
சென்னை: சென்னையில் பூந்தமல்லி டூ வடபழனி இடையிலான 15.8 கி.மீ. புதிய வழித்தடத்தில் ஆளில்லா மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான இறுதிப் பாதுகாப்பு அனுமதியை தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழுவினர் வழங்கியுள்ளனர்.. மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ள இந்த ரயில்கள் மூலம் இரு பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் இனி வெறும் 20 நிமிடங்களாகக் குறையும்.. மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த சேவை விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.. தற்போதைய முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையில் மாதத்திற்கு சுமார் 1 கோடி அளவிற்கு பயணிகள் பயணித்து வருகிறார்கள்.. இதனால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2-வது கட்டமாக 118.9 கி.மீ. நீளத்துக்கு 3 வழித்தடங்களில் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை விறுவிறுப்பாக அமைத்து வருகிறது.

பூந்தமல்லி புறவழிச்சாலை
இதில் 3-வது வழித்தடமான, பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ. தூரத்துக்கு மஞ்சள் நிற வழித்தடத்துக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் மேற்கு பகுதி சென்னை முழுமையாக இணைகிறது.. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரை உயர்மட்டப்பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது.
அதே நேரம் போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி வரை உள்ள ரயில் நிலைய பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.. இதனால் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் வரை உள்ள 10 ரயில் நிலையங்களிலும் ரயில் சேவையை தொடங்க முடியும்.. ஆனால் போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி இடையே உள்ள ரயில் நிலைய பணிகள் நிறைவடையாததால் போரூரில் இருந்து புறப்படும் ரயில் 11-வது ரயில் நிலையமான வடபழனியில்தான் போய் நிற்கும்.
பாதுகாப்பு சான்றிதழ்
மொத்தத்தில் 15.8 கி.மீ. தூரத்துக்கு பயணிகள் போக்குவரத்தை தொடங்குவதற்கு பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி வழங்கியிருந்தார்.. இருந்தாலும் பணிகளை முடித்து திறக்கவே மெட்ரோ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்..
சென்னையில் 4-வது வழித்தடமான பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து 1-வது வழித்தடமான வடபழனி இடையேயுள்ள பிரிவில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் ஜங்ஷன், வடபழனி உள்ளிட்ட 11 நிலையங்கள் பயணிகளுக்கு தேவையான நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது..
சென்னை மெட்ரோ சூப்பர் வசதிகள்
இதில் ஆளில்லாத 10 மெட்ரோ ரயில்கள் முதலில் இயக்கப்பட உள்ளது.. அதேநேரம் இந்த மெட்ரோ ரயில் போரூருக்கு அடுத்து நேரடியாக வடபழனியில்தான் நிற்கும்.. போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி இடையே உள்ள ஆலப்பாக்கம், கருப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் ஆகிய 5 ரயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, இப்போது பயணிகளுக்கான அடிப்படை உள்ளிட்ட சிவில் வேலைகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்து படிப்படியாக ஒவ்வொரு ரயில் நிலையமும் திறக்கப்படும்.. குறிப்பாக, வருகிற ஜூன் மாதத்துக்குள் போரூரில் இருந்து வடபழனி வரை உள்ள அனைத்து பணிகளும் முழுமை பெறும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், சில முக்கிய நிபந்தனைகளுடன் மட்டுமே இந்த வழித்தடத்திற்கு அனுமதி வழங்கியிருந்தார்.. இந்த நிலையில், கடந்த மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழுவினர் இந்த பாதையில் அதிரடி ஆய்வு நடத்தினார்கள்.
ஆளில்லாத 10 மெட்ரோ ரயில்கள்
இந்த ஆய்வுக்குப் பிறகு தற்போது ரயில்களை முழுமையாக இயக்குவதற்கான இறுதி அனுமதி கிடைத்துள்ளது.. இந்த புதிய அனுமதியின்படி, போரூர் முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டரிலிருந்து 40 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது..
இதன்மூலம் ஒட்டுமொத்த சராசரி வேகம் மணிக்கு 32 கிலோ மீட்டராக இருக்கும்.. இதன் வழியாக பூந்தமல்லி பைபாஸ், முல்லைத்தோட்டம், கரையாஞ்சாவடி, காட்டுப்பாக்கம், போரூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களிலும் ரயில்கள் நின்று செல்லும்..
ரயில் பயணிகளுக்கு நன்மைகள்
இருந்தாலும் ஆலப்பாக்கம், வளசரவாக்கம், சாலிகிராமம் போன்ற இடங்களில் கட்டுமான பணிகள் சற்று தாமதமாகி உள்ளதால், போரூருக்கு அடுத்து வடபழனியில் மட்டுமே ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்து இந்த புதிய வழித்தடம் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்பட முற்றிலும் தயாரான நிலையில் உள்ளது.
எனவே, மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஒப்புதல் மற்றும் திறப்பு விழா தேதி முடிவானதுமே இந்த மெட்ரோ ரயில் சேவை முறைப்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்த புதிய சேவை தொடங்கப்பட்டால் ஆற்காடு சாலை மற்றும் போரூர் பகுதியின் போக்குவரத்து நெரிசல் பாதியாகக் குறையும்.. பூந்தமல்லி டூ வடபழனி இடையேயான பயண நேரம் இனி வெறும் 20 நிமிடங்களாகக் குறையும்.. இதனால் ஐடி பூங்காக்கள், பெரிய மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையத்திற்குப் பொதுமக்கள் மிக எளிதாகச் செல்ல முடியும் என்பதால் காலமும், நேரமும் பெருமளவில் மிச்சமாகும்.!!












Click it and Unblock the Notifications