சென்னைக்குள் பாகிஸ்தானுக்கு சொந்தமான நிலம்! வெளிவராத வடசென்னையின் இன்னொரு உலகம்
சென்னை: பெரம்பூர் பகுதியில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான நிலப்பகுதி ஒன்று இருப்பதாகவும் அங்கே குடியிருக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருவதாகவும் இத்தனை ஆண்டுகள் கடந்து தெரியவந்துள்ளது.
வடசென்னை பற்றிப் பல கதைகள் கேட்க வித்தியாசமாக இருக்கும். உழைக்கும் மக்கள் நிறைந்த அந்தப் பகுதிக்குள் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு தனித்தன்மையான கதை இருக்கிறது. அப்படி இதுவரை அறியப்படாத ஒரு புதிய இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது வடசென்னை பகுதியான பெரம்பூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாகிஸ்தானுக்குச் சொந்தமான நிலம் என்கிறார்கள். எனவே இதை எனிமி லேண்ட் என்றும் சொல்கிறார்கள். அது எப்படியா? சென்னைக்குள் பாகிஸ்தான் நிலம் இருக்கும்? பாகிஸ்தான் எங்கே இருக்கிறது? சென்னை எங்கே இருக்கிறது? ஒரு லாஜிக் வேண்டாமா என உடனே சிலர் யோசிக்கலாம். கேள்வியும் எழுப்பலாம். அதே சந்தேகத்துடன் இந்தக் கதையைப் பலரும் முதன்முறையாகக் கேட்கும்போது அணுகுகிறார்கள்.

சென்னை பெரம்பூர் அம்பேத்கர் நகர் என்று ஒரு பகுதி இருக்கிறது. இதைப் பற்றி தீபக் என்ற யூடியூபர் ஒரு காணொளியைப் பதிவேற்றி இருக்கிறார். இவர் அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வும் செய்திருக்கிறார். இந்த ஏரியாவை ஒட்டி உள்ள அனைத்து சாலைகளும் மிக நேர்த்தியாக சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் நகர் தொடங்கும் புள்ளியிலிருந்து சாலை வசதி இல்லாமல் மண் ரோடு மட்டுமே காட்சி தருகிறது. கிட்டத்தட்ட இங்கே 280 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
"என் முன்னோர்கள் காலத்திலிருந்தே நாங்கள் 50 வருடங்களாக இங்கேதான் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதிக்கு அருகில்தான் 'நெசர்சன் லெதர் ஃபேக்ட்ரி' இருந்தது. ஆட்டுத் தோல் மற்றும் ரோமங்களைப் பிரித்து ஆடை மற்றும் ஷூட் தயாரிப்பதற்காக ஏற்றுமதி செய்து வந்த கம்பெனி. எங்களின் முன்னோர்கள் அதில் வேலை பார்த்தார்கள். அதை 1960களில் மூடிவிட்டனர்.

அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட நிலம்தான் இது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது அந்த லெதர் ஃபேக்ட்ரி உரிமையாளர்கள் பாகிஸ்தானோ அல்லது பங்களாதேஷோ போய்விட்டனர். அதனால் இந்த நிலத்தை எனிமி லேண்ட் என்கிறார்கள்" என்கிறார் வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ள இந்தப் பகுதி பிரமுகர்.
இதைப் பற்றி யூடியூபர் தீபக் விளக்கம் அளிக்கையில், "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962இல் போர் நடந்தது. பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இது 1965இல் நடந்தது. போர் முடிந்ததும் பெரம்பூர் பகுதியிலிருந்த இஸ்லாமியக் குடும்பத்தினர் அங்கே சென்று தங்கிவிட்டனர். அதன் பின் 1966 இல் தாஷ்கண்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் போனவர்களின் சொத்துக்களை அதேபோல் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்து குடியேறியவர்களின் சொத்துகளை உரியவர்களிடமே ஒப்படைத்து விடுகிறோம் என்று உடன்படிக்கை போடப்பட்டது.
அதன்படி பலரும் தங்களின் சொத்துகளை விற்றுவிட்டார்கள். ஆனால், சென்னையிலிருந்த நிலத்தை உரியவர்கள் யாருக்கும் விற்கவில்லை. அதை உணர்ந்து அரசாங்கம் 1968இல் எனிமி பிராபர்டி ஆக்ட் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துவிடுகிறது. இப்போது அந்தச் சட்டத்தின் கீழாக இந்தச் சொத்துகளைச் சேர்த்து விட்டனர். 2017இல் விதிமுறை வகுக்கப்பட்டது. அதில் இந்த எதிரி நிலத்தை எப்படி அணுக வேண்டும்? யாருடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என அதில் விளக்கமளிக்கப்பட்டது. அதன்படி இந்த எதிரி நிலத்திற்குப் பட்டா, மின்வசதி, குடிநீர் வசதி எதையும் வழங்க முடியாது என அறிவித்துவிட்டது" என்கிறார்.
இப்போது இந்த நிலத்தை மீட்டு தரும்படி 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் குடியேறிய வம்சத்தினர் வழக்குப் போட்டுள்ளனர். ஆகவே, இங்கு வசிக்கும் மக்களை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் மக்கள் அனைவரும் கூலி வேலைதான் செய்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகள் வெறும் ஓலை கொட்டாயாகவே உள்ளது. அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. குறைந்தது ஒவ்வொரு குடும்பமும் 60 ஆண்டுகள் மேலாக வாழ்த்து வருகிறார்கள். ஆகவே, இப்போது காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது? எங்கே போவது? என பதற்றமாக உள்ளனர். இந்தப் பகுதியில் மசூதி, கோயில், சர்ச் எனச் சகல மதத்தினருக்கான ஆலயங்களும் உள்ளன. பல குடும்பங்களில் முதல் தலைமுறையாகக் கல்லூரி வரை இப்போதுதான் சென்றுள்ளனர்.
இங்கே வசித்து வரும் இளைஞர் ஒருவர், "எனிமி ஆக்ட் 1968 கொண்டு வரும்போது இந்த நிலங்கள் வாரிசுகளுக்குச் சொந்தமில்லை என்று சட்டம் போட்டுவிட்டார்கள். அதன்பின்னர் இதைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுதும் சேர்ந்து போராடுகிறார்கள். 2010வரை இதுதான் சட்டம். பின்னர் சட்டத் திருத்தம் செய்தது மத்திய அரசு. custodian of enemy property for india அலுவலகம் மும்பையில் உள்ளது. அங்கே சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, நிலத்தை இத்தனை ஆண்டுகளாக நிர்வகித்து வந்ததைக் காட்டி, முறைப்படி நில உரிமையாளர் ஒப்புதல் படி மீட்டுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர்" என்கிறார்.
இந்தியர்களாக இருந்தும் இந்தியாவில் உள்ள சொத்துகளை மீட்க முடியாமல் இந்தப் பகுதி மக்கள் திண்டாடி வருகின்றனர். அரசு விழிக்குமா? இதற்கு ஒரு விடிவு காலம் வருமா?












Click it and Unblock the Notifications