தூத்துக்குடி பயணிகளின் பல வருட கனவு! வந்தாச்சு பாலருவி எக்ஸ்பிரஸ்! எந்த வழியாக செல்லும்? முழு விவரம்
சென்னை: கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது, எத்தனை மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் என்கிற தகவலையும் ரயில்வே வெளியிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ஒரே ஒரு ரயில்தான் இயக்கப்படுகிறது. முத்துநகர் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான நகரமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் உள்ளன. ஆனால் தூத்துக்குடிக்கு ரயில் சேவைகள் அதிகமாக இல்லை.

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சுமார் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை பயண நேரம் ஆகிறது. ஆனால் பஸ்சில் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் நெல்லைக்கு சென்று விட முடியும். இதனால் இந்த ரயிலை அதிகம் பயணிகள் விரும்புவது இல்லை. இதனால் மணியாச்சி பைபாஸ் தடம் வழியாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதேபோல, தூத்துகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலரும் கேரளாவில் வசித்து வருகிறார்கள். தொழில் நிமித்தமாக பயணிகள் பலரும் அங்கு பயணிக்கிறார்கள். எனவே திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் தான், முதல் முறையாக மணியாச்சி பைபாஸ் வழியாக பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் மணியாச்சி பைபாஸ் வழியாக இயக்கப்படும். இதனால், தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு மணி 20 நிமிடத்தில் சென்றடைகிறது. தூத்துக்குடி - திருநெல்வேலி இடையேயான ரெயில் பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்படும். திரிசூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், காயகுளம், கொல்லம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலிக்கு அதிகாலை 4.35 மணிக்கு வந்து சேரும். 4.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் தூத்துக்குடிக்கு 6.40 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலிக்கு 11.25க்கு வந்து சேரும். திருநெல்வேலியில் இருந்து 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், செங்கோட்டை, புனலூர், தென்மலை, கோட்டயம், எர்ணாகுளம் ஆலுவா வழியாக பாலக்காட்டிற்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடையும். பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ரயில்வே நிறைவேற்றியுள்ளது. இதனால், பயணிகளின் பல வருட கனவு நிறைவேறியிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை புனலூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், திருநெல்வேலி வரை இயக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications