பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை.. பைக் டாக்ஸி புக்கிங் செய்தவருக்கு.. கடைசியில் இப்படியா ஆகணும்
சென்னை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நரேந்திரசிங் என்பவர் மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் பெரும்பாக்கத்தில் இருந்து மடிப்பாக்கம் செல்ல பைக் டாக்ஸி புக்கிங் செய்தார். இவர் சென்ற பைக் டாக்ஸி துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக சென்ற போது, பின்னால் வந்த லாரி பைக்கை முந்தி செல்ல முயன்றது. இது பைக் டாக்ஸியை புக்கிங் செய்த நரேந்திர சிங்கிற்கு எமனாக மாறி உள்ளது.
பைக் டாக்ஸி சேவைகளுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமான அனுமதி இல்லை. எனினும் பைக் டாக்ஸிகள் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக சொல்வது என்றால், சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் தான் பைக் டாக்ஸி சேவை பயன்பாடு அதிகமாக உள்ளது. சென்னையில் பைக் டாக்ஸியில் செல்ல பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண், பெண் இருவருமே பைக் டாக்ஸியை புக்கிங் செய்து செல்லவே விரும்புகிறார்கள். குடும்பமாக செல்பவர்கள் 2 பேர் அல்லது அதற்கு மேல் பயணிப்போர் தான் ஆட்டோ அல்லது காரை புக்கிங் செய்கிறார்கள். பைக் டாக்ஸியை பொறுத்தவரை விபத்து காப்பீடு போன்ற சிக்கல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதேபோல் பயணிகள் பாதுகாப்பிலும் சில நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது. அப்படி ஒரு சிக்கல் தான் மடிப்பாக்கத்தில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த 52 வயதாகும் நரேந்திரசிங் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து மடிப்பாக்கத்திற்கு செல்ல 'பைக் டாக்சி'யை புக் செய்திருக்கிறார்.
அதன்படி மயிலாப்பூரை சேர்ந்த 23 வயதாகும் விஸ்வா என்பவர் நரேந்திர சிங்கை பைக்கில் அழைத்து சென்றார். இருவரும் ஹெல்மெட் அணிந்தபடி துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக மடிப்பாக்கம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது பின்னால் வந்த லாரி பைக்கை முந்தி செல்லமுயன்றபோது லேசாக உரசியிருந்தது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நரேந்திரசிங் மீது லாரி ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற விஸ்வா படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த விஸ்வாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த நரேந்திரசிங் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான திரிசூலத்தை சேர்ந்த 47 வயதாகும் கணேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications