நிலம், மனை வாங்கறீங்களா? பஞ்சமி நிலத்தை வாங்கலாமா? DC நிலம் பட்டா அறிய 2 வழி? விஏஓ ஆபீஸ் முக்கியம்
சென்னை: பஞ்சமி நிலம் என்றால் என்ன? பஞ்சமி நிலம் பற்றி அறிய அதன் பட்டா பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்கிறார்களே ஏன்? எந்தெந்த வழிகளில் பஞ்சமி நிலத்தின் பட்டா பற்றி அறியலாம்? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, கடந்த 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் தான், DC நிலம் அதாவது Depressed Class Land என்று சொல்லக்கூடிய பஞ்சமி நிலமாகும்.

நாடு முழுமைக்கும் உள்ள பட்டியலின மக்களுக்கு இலவச நிலங்கள் வழங்கப்பட்டதையடுத்து, இங்கு விவசாயம் செய்யவோ அல்லது வீடு கட்டிக்கொள்ளவோ அம்மக்களுக்கு அனுமதி உண்டு.
ஆனால், முதல் 10 வருடங்களுக்கு இந்த நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாது. தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது. 10 வருடம் கழித்து நிலத்தை விற்க உரிமை உண்டு என்றாலும், அந்த நிலங்களை பட்டியலின மக்களிடம் மட்டுமே விற்க முடியுமே தவிர, வேறு சாதியினருக்கு விற்க முடியாது.
பஞ்சமி நிலத்தின் பட்டா
பட்டியலினத்தை சேராத ஒருவர் பஞ்சமி நிலத்தை வாங்க முயற்சித்தால் அதனை அரசு பதிவு செய்திடக்கூடாது. அப்படியே தவறு நடந்து பதிவு செய்துவிட்டால் எந்தவித இழப்பீடுமின்றி அந்த நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.
இந்த பஞ்சமி நிலங்களை ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களைத் தவிர வேறு யார் வாங்கினாலும் அந்த விற்பனை செல்லாது, அந்த நிலத்தை அரசு பறிமுதல் செய்துவிடலாம் என்ற சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. எனவே, புறநகர் பகுதிகளில் நிலம் வாங்க விரும்புபவர்கள், பஞ்சமி நிலம், அதன் பட்டா பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்..
கண்டிஷன் நிலமா? கிரயம் தடை செய்யப்பட்ட நிலமா?
எங்கே மனை, இடம் வாங்க நினைக்கிறீர்களோ, அந்த பகுதியிலுள்ள விஏஓ அலுவலகத்தில் இதை அறிந்து கொள்ளலாம். நீங்கள் வாங்க போகும் மனை அல்லது நிலம் குறித்த பதிவேடுகளை, அங்குள்ள புத்தகங்களில் பதிவேற்றம் செய்திருப்பார்கள்.. அந்த நிலத்தின் சர்வே நம்பரை வைத்து, அந்த நிலம் பஞ்சமி நிலமா? கண்டிஷன் நிலமா? கிரயம் தடை செய்யப்பட்ட நிலமா? கள்ளர் நிலமா? ஆதிதிராவிடர் நிலமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருந்தால், அதை வாங்காமல் தவிர்க்கலாம்.. அதேபோல, நகர்ப்பகுதிகள் மனை அல்லது நிலம் வாங்க நேர்ந்தாலும், பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR போன்ற ஆவணங்களை கவனித்து பார்ப்பதும் அவசியமாகும்.
விஏஓ ஆபீஸ் மேனுவல் பதிவேடுகள்
பஞ்சமி நிலம் பற்றி அறிய வேண்டுமானால், அதன் பட்டா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு 2 வழிகள் உள்ளன. முதலாவதாக, நீங்கள் வாங்க போகும் மனை அல்லது இடம் அமைந்துள்ள பகுதியின் விஏஓ அலுவலகத்தில் உள்ள பட்டா சம்பந்தப்பட்ட மேனுவல் அ-பதிவேடுகளை பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம். அதில், கண்டிசன் நிலம், கிரயம் தடை செய்யப்பட்ட நிலம், DC நிலம் என்று குறிப்புகள் இருந்தால் எச்சரிக்கையாக செயல்படலாம்.
கலெக்டர்ஆபீஸ் RSLR ஆவணங்கள்
இரண்டாவதாக, நீங்கள் வாங்க போகும் நிலம் அல்லது நிலம் உள்ள கலெக்டர் அலுவலகம் சென்று ஆர்எஸ்எல்ஆர் (ReSettlement Land Record - RSLR) ஆவணத்தை பெற்று தெரிந்து கொள்ள வேண்டும். அதில் DC நிலம் என்ற குறிக்கப்பட்டிருந்தால், அது பஞ்சமி நிலம் என்பதை அறிந்து கவனமாக செயல்படலாம்.
ஆக மொத்தம், நகர்ப்பகுதி, புறநகர்ப்பகுதிகளில் நீங்கள் இடம், மனை, நிலம் வாங்க நேரிட்டால், அதில் ஏதாவது சந்தேகம் எழுந்தால், பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR ஆகிய ஆவணங்களை கவனித்தாலே போதும்.. இவைகளை நன்கு ஆராய்ந்த பிறகே சம்பந்தப்பட்ட மனை அல்லது நிலத்தை வாங்குவது பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதேபோல, பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டுமானால், சென்னை ஆவண காப்பகத்தில் பழைய ஆவணங்கள் உள்ளதா என்று தேடிப்பார்க்கலாம்.. அப்படி ஆவணங்கள் கிடைத்துவிட்டால், கோர்ட் உதவி மூலம், அவைகளை நீங்கள் மீட்க வழி உள்ளதாம்.












Click it and Unblock the Notifications