பாதி மீட்டிங்கில் பதறிப் போய் ஓடிய புஸ்ஸி..விஜய் வீட்டிலிருந்து வந்த போன் கால்! ’தோழர்கள்’ ரெடியாமே!
சென்னை: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிக பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையை எட்டும் முயற்சியில் தவெக தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக இன்று காலையிலேயே விஜய்யை அவர் சந்தித்ததாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் முழு தீவிரத்துடன் இறங்கியுள்ளார் விஜய்.

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பனையூர் கூட்டம்
இதனால், பெரும்பான்மை பெற இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது. தற்போதைய சூழலில் குறைந்தது 10 முதல் 11 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக பல கட்சிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முதல் வாய்ப்பாக பார்க்கப்பட்டது காங்கிரஸ். 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட இந்தக் கட்சி, ஆட்சியில் பங்கு மற்றும் அமைச்சரவை வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆதரவு தரும் என அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
மேலும், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் பேச்சு நடக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று காலை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் பங்கேற்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, "எந்த சூழ்நிலையிலும் கட்சியையும் தலைவர் விஜய்யையும் விட்டு விலகக்கூடாது. 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜயின் புகைப்படத்தை பார்த்து விசுவாசத்தோடு இருக்க வேண்டும்" என்று அவர் எம்எல்ஏக்களிடம் உணர்ச்சிவசப்பட்டு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பனையூர் கூட்டம்
தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் 'குதிரை பேரம்' குறித்த பரபரப்புகளுக்கு மத்தியில், புஸ்ஸி ஆனந்தின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தவெக எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கூட்டத்தில் சில நிமிடங்கள் மட்டுமே பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த், திடீரென அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு நீலாங்கரைக்கு சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஸ்ஸி ஆனந்த்
ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், அவரது இந்த திடீர் பயணம் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய்யை புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆளுநருடன் சந்திப்பு
ஆதரவு கடிதங்கள் கிடைத்தால் ஆளுநரை மீண்டும் சந்திக்கும் திட்டம், ஆதரவு கிடைக்காத சூழலில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அல்லது அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிப்பெரும் கட்சி
மேலும், "தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சி அமைக்க விடாமல் அரசியல் சதிகள் நடைபெறுகின்றன" என்ற கருத்தையும் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இதனால், தவெக தரப்பு தங்களது எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் அடுத்த அரசை யார் அமைப்பார்கள் என்ற கேள்வி இன்னும் நீடித்து வரும் நிலையில், பனையூரிலும் நீலாங்கரையிலும் நடைபெறும் இந்த தொடர் ஆலோசனைகள் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications