கடுப்பான எடப்பாடி.. “பன்னீர் ரோஜா” நினைவிருக்கா? புவிசார் குறியீடு பெறப்படும் என பட்ஜெட் அறிவிப்பு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்த பன்னீர் ரோஜா மாலையை போட்டபோதுதான் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது ஆவேசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: மாலைகள் தயாரிக்கப்படும் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாக்களுக்கு உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நாடும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அதிக வரத்துள்ள 100 விற்பனைக் கூடங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விற்பனைக்குழு நிதியில் புதுப்பிக்கப்படும்.

புவிசார் குறியீடு
ஒவ்வொரு மண்ணுக்கும், ஒவ்வொரு மகத்துவம் இருக்கிறது. தட்பவெப்ப நிலை பெய்யும் மழை. அடிக்கும் காற்று. படரும் வெளிச்சக் கதிர்கள் ஆகியவற்றைப் பொறுத்து. சுவை பகுதிக்குப் பகுதி வேறுபடுகிறது. தமிழ்நாட்டுக்கே உரிய வேளாண் பொருட்கள் எண்ணற்றவை இருக்கின்றன. ஒரு மாவட்டத்தில் விளைகிற மாதிரி, மற்றொரு மாவட்டத்தில் அவை விளைவது இல்லை.

கடந்த ஆண்டு 10 பொருட்கள்
அத்தகைய சிறப்பு வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலகளாவிய சந்தையில் இடம்பெறச் செய்வதன்மூலம் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பன்னீர் ரோஜா
இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

உழவர் சந்தை
உழவர் சந்தைகள், உற்பத்தி செய்பவரே. விற்பனை செய்வதற்கான தாழ்வாரமாகத் திகழ்ந்து வருகின்றன. குறைந்த விலையில் பசுமை மாறாத காய்கறிகளை வாங்கும்பொழுது. நுகர்வோர் முகத்தில் மகிழ்ச்சி; பகர்வோர் விழிகளில் நெகிழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 உழவர் சந்தைகள் தமிழ்நாட்டில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் எண்ணிக்கை உயர்வு
இதனால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, சராசரியாக நாளொன்றுக்கு 8,000 விவசாயிகள், மூன்று இலட்சம் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர். வரும் ஆண்டு திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

எடப்பாடி பழனிசாமி கோபம்
மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்றார். இதில் புவிசார் குறியீடு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள கிருணகிரி பன்னீர் ரோஜாவில் தயாரிக்கப்படும் மாலைகள் மிகவும் பிரபலம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்த பன்னீர் ரோஜா மாலையை போட்டபோதுதான் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது ஆவேசமடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications