பண்ருட்டியார் டெல்லி கிளம்பினாலே அள்ளு கிளம்புமே! 88 வயசுல கட்சி? வன்னியர் ஓட்டால் சர்ப்ரைஸ் லாபம்
சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரன், "எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியை தொடங்கியிருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. 88 வயதில் பண்ருட்டியார் எதற்காக இந்த கட்சியை துவங்கி உள்ளார்? வரப்போகும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் சொல்கிறார்.. அப்படியானால் எதற்காக இந்த கட்சி? யாருக்காக இந்த கட்சி? தமிழக அரசியலின் 'சாணக்கியர்' என்று வர்ணிக்கப்படும் பண்ருட்டியார் தேர்தல் சமயத்தில் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றால், அதில் விஷயம் இல்லாமல் இருக்குமா??? அதை பற்றி பார்ப்போம்..
யாரிந்த பண்ருட்டி ராமச்சந்திரன்??? தமிழக அரசியலில் பண்ருட்டியார் என்று அன்போடு அழைக்கப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன், வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல... அவர் ஒரு நடமாடும் அரசியல் பல்கலைக்கழகம்..

சாணக்கியர் பண்ருட்டியார்
அன்று அண்ணாவால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டு, கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் அமைச்சரவையிலும் முக்கிய பங்காற்றியவர் பண்ருட்டியார்.. திமுகவில் தனது பயணத்தைத் தொடங்கி, பிறகு எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக அதிமுகவில் வலம் வந்தவர்..
பாமக, மக்கள் நலவுரிமைக் கழகம் எனப் பயணித்து, விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியபோது தனது கட்சியை கலைத்துவிட்டு அவருக்கு பக்கபலமாக நின்றார்.. விஜயகாந்த் அரசியலில் விஸ்வரூபம் எடுத்ததற்கு பின்னணியில் பண்ருட்டியாரின் மூளை உழைப்பு மிக மிக முக்கியமானது.. அவர் தேமுதிகவில் இருந்தவரை அக்கட்சி கம்பீரமாக இருந்தது.. எப்போது அந்த கட்சி பண்ருட்டியாரை விலக்கி வைக்க துவங்கியதோ, அப்போதே அந்த கட்சி சிதைந்து போனது ஒரு வரலாற்று உண்மை..
ஓபிஎஸ், விஜயகாந்த்
பண்ருட்டியாரின் அரசியல் பாணி என்பது மிகவும் தனித்துவமானது.. அவர் டெல்லி செல்கிறார் என்றாலே தமிழக அரசியல் களம் கதிகலங்கி போகுமாம்.. அந்த அளவுக்குச் சட்ட நுணுக்கங்கள், அரசியல் சாசன அறிவு மற்றும் தேர்தல் வியூகங்களில் அவர் ஒரு மகா மேதை..
அமைதியான செயல்பாடு, திரைமறைவுத் திட்டங்கள், மற்றும் சரியான நேரத்திற்காகக் காத்திருந்து காய் நகர்த்துவது எனப் பண்ருட்டியார் ஒரு தேர்ந்த ராஜதந்திரி.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்தபோது, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவருமே பண்ருட்டியாரின் வழிகாட்டலை வேண்டி நின்றனர்..
அவ்வளவு ஏன், ஓபிஎஸ் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முழு முதற்காரணமாக இருந்தவர் இவரே.. ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்தது முதல், அவர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டதாகப் பண்ருட்டியார் கருதினார்.. தனது கருத்துகள் மதிக்கப்படாத நிலையில், "ஓபிஎஸ்ஸுடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது, அவரது அத்தியாயம் முடிந்துவிட்டது" என்று அதிரடியாக அறிவித்து வெளியேறியுள்ளார்..
88 வயதில் புதிய கட்சி
சரி, இப்போது புதிய கட்சியை எதற்காக தொடங்கியுள்ளார்? "எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் கட்சியை துவங்கியிருப்பது, அதிமுகவின் தற்போதைய தலைமைக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது..
எம்ஜிஆரின் பெயரையும் பழைய அதிமுக மரபையும் மீட்டெடுப்பதே பண்ருட்டியாரின் நோக்கமாக தெரிகிறது.. தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடாது என்று அறிவித்தாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பண்ருட்டியாஉர் தன்னுடைய ஆதரவை தர உள்ளதாக தெரிகிறது..
ஏற்கனவே மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பண்ருட்டியாரின் அறிவுத்திறனும் அனுபவமும் விஜய்க்குப் பெரும் பலமாக அமையும்.. எம்ஜிஆரைத் தனது ஆதர்சமாக குறிப்பிடும் விஜய், பண்ருட்டியாருடன் கைகோர்ப்பது அதிமுகவின் பாரம்பரிய ரத்தத்தின் ரத்தங்களை தவெக பக்கம் இழுக்க உதவும்..
குறிப்பாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பாத அதிமுக தொண்டர்களுக்கு பண்ருட்டியார் ஒரு சிறந்த மாற்றாகத் தெரிவார்.. இது அதிமுகவின் வாக்கு வங்கியை மேலும் சிதறடிக்கும் என்பது உறுதி..
வன்னியர் வாக்கு வங்கி
இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.. வன்னியர் சமூகத்தின் மூத்த தலைவரான பண்ருட்டியார் மூலம் வடதமிழகத்தில் வன்னியர்களின் ஆதரவை தவெக எளிதாகப் பெற முடியும்.. விஜய்யின் வேகமும் பண்ருட்டியாரின் விவேகமும் இணைந்தால் அது 2026 தேர்தலில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது..
வடதமிழகத்தில் தவெகவுக்கான ஆதரவை உறுதிப்படுத்தவும், வன்னியர்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கவும் இது உதவும்.. அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த தலைவரின் வழிகாட்டல் விஜய்யின் அரசியல் பயணத்திற்குப் பெரும் பலமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..
அந்தவகையில், வரும் 23ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள அறிமுக விழா, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பண்ருட்டியாரின் இந்த இறுதிப் போர் தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இப்போதே கணிக்க முடியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications