பரந்தூர் ஏர்போர்ட் வந்தால் கான்கிரீட் காடாகும் நீர்நிலைகள்.. சென்னைக்கு காத்திருக்கும் பெரு வெள்ளம்?
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமும் கூவம் வடிநிலைப் பகுதியில் அமைந்துள்ளது, ஆனால் டிட்கோ ஆய்வில் இந்த நிலம், பாலாறு வடிநிலை பகுதியில் உள்ளது என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று உவகை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் விதுபாலா தெரிவித்துள்ளார்..
சென்னையின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய 27,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக சுமார் 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், அதில் பெரும் பகுதி விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது... தங்கள் விளைநிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க விரும்பாத உள்ளூர் விவசாயிகள், இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்..
பரந்தூர் ஏர்போர்ட்
விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியிலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் ஒப்பந்த ஆவணங்கள் தயாரிப்பையும் அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான டெண்டர் ஆவணங்களை வரும் மார்ச் மாதத்தில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு இந்த ஆவணங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க சுமார் 2 மாதங்கள் வரை காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும் என்பதால், அதன் பிறகு டெண்டர் விடப்படும்.
சென்னை - பரந்தூர் விமான நிலையம்
தேர்தல் முடிந்த கையோடு இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு, கட்டுமான பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று தெரிகிறது. இப்போது வரை சுமார் 1,650 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நிலங்களை பெற அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் நிலங்களை ஒருங்கிணைத்து, நவீன வசதிகளுடன் கூடிய விமான நிலையத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் இறுதி இலக்காக உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், பரந்தூர் விமான நிலையம் அமையும் இடம் 26 சதவீதம் நீர்நிலை பகுதியாக உள்ளதாக ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.
அரசு நியமித்த நிபுணர் குழு
சென்னையில், உவகை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விதுபாலா செய்தியாளர்களை சந்தித்துபேசும்போது, "பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து 2023ல் ஏர்போர்ட் அமைக்க விமான நிலையம் அமைய பரந்தூர் தகுந்த இடமா என்பது குறித்து சாத்தியக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை மதிப்பிட தமிழக அரசு மாநில நிபுணர் குழுவை மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைத்தது.
ஆனால் இந்த குழுவின் நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை இதுவரை பொதுமக்கள் முன்பு வெளியிடப்படவில்லை.
எனவே, அந்த அறிக்கையை முழுமையாக பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட வேண்டும். நீரியல் மற்றும் வெள்ள மாதிரி ஆய்வுகளை முறையாக மேற்கொண்ட பிறகே அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும்
சென்னைக்கு வெள்ள ஆபத்து?
சாத்தியக்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பாகவே அரசு 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது. பரந்தூர் ஏர்போர்ட் அமைய உள்ள பகுதி குறித்து பல வல்லுநர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். அதில், 26.5 சதவீதம் நீர்நிலைகளாக இருக்கிறது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் அறிக்கையில் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பரந்தூரில் ஏர்போர்ட் அமைந்தால் சென்னை வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொள்ளும்... போதுமான நீரியல் ஆய்வுகள் இல்லாமல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கூவம் நதி - 2015 பெருவெள்ளம்
ஏனென்றால், இந்திய விமான நிலைய ஆணைய விதிகளின்படி இரு சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே 150 கி.மீ தூரம் இருக்க வேண்டும்; ஆனால், மீனம்பாக்கத்திற்கும் பரந்தூருக்கும் இடையிலான வான்வழித் தூரம் வெறும் 42 கி.மீ மட்டுமே.
மேலும், இந்த நிலம் கூவம் வடிநிலப் பகுதியில் அமைந்திருந்தும், டிட்கோ (TIDCO) ஆய்வில் இது பாலாறு வடிநிலப் பகுதியில் உள்ளதாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று போகம் விளையும் செழிப்பான இப்பகுதியை அழிப்பது சென்னையின் நீரியல் சமநிலையைப் பாதிக்கும்.
மாற்று வழி தேவை
குறிப்பாக, 2015 பெருவெள்ளத்தின் போது கூவம் நதியால் உபரி நீரைச் சுமக்க முடியாததே சென்னை மூழ்கக் காரணமாக அமைந்தது. தற்போது பரந்தூர் நீர்நிலைகளை ஆக்கிரமித்தால், மழைக்காலங்களில் கூடுதலாக 12,000 கன அடி வரை தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சென்னைக்குள் புகுந்து பேரழிவையும், எதிர்காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சத்தையும் உருவாக்கிவிடும்..
அதனால் தமிழ்நாடு அரசு அனுமதிகள் வழங்குவதையும், நிலப்பயன்பாடு மாற்றத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். நிபுணர் குழு அறிக்கையை வெளியிடவேண்டும். மாற்றுவழிகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்..












Click it and Unblock the Notifications