பெண் குழந்தைகள் பாலியல் டார்ச்சருக்கு உள்ளாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? கிருத்திகா உதயநிதி யோசனை
குழந்தைகளின் பிரச்சனையை பெற்றோர்கள் கேட்க வேண்டும் என கிருத்திகா தெரிவித்துள்ளார்
சென்னை: பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை, அவரவர் பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே போதும்.. அப்படி பெற்றோர்கள் கேட்காததால் தான் குழந்தைகள் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்"என்று கிருத்திகா உதயநிதி வேதனை தெரிவித்துள்ளர்
பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே தற்கொலை போன்ற முடிவுகளை தவிர்க்கலாம் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிட்டது.

நடவடிக்கைகள்
எத்தனையோ பள்ளிகளில் மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவது நடந்து வருகிறது.. இது தொடர்பாக தமிழக அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும், இந்த குற்றங்கள் இன்னமும் குறைந்தபாடில்லை... அதேசமயம், மாணவிகளின் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும்தான் அதிகரித்து கொண்டிருக்கிறது.

பிரச்சனைகள்
இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகளின் பிரச்சினைகளை பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்கவேண்டும் என்றும், அப்படி செய்தாலே பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும் என்றும் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா உதயநிதி பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து நிறைய விஷயங்களை பேசினார்.

விளையாட்டு
அப்போது, "நம் பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை எல்லாம் அவர்கள் மீது திணித்துவிடக்கூடாது.. பிள்ளைகளின் விருப்பம் என்னவோ, அதை தெரிந்து கொண்டு, அவர்களை வளர்க்க வேண்டும்.. சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு யோகா, விளையாட்டு போன்ற ஆற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.. இதன்மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்" என்றார்.

பாலியல் சீண்டல்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை கிருத்திகா சந்தித்து பேசினார்... அப்போது, "பெண் குழந்தைகள் கல்வி என்பது மிகமுக்கியமான ஒன்று.. ஒரு பெண் படித்தால் மட்டுமே அவளுடைய குடும்பத்தை நல்வழியில் எடுத்துச்செல்ல முடியும்.. பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து விட்டது.. ஆனால், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே போதும்.. அப்படி பெற்றோர்கள் கேட்காததால் தான் குழந்தைகள் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications