ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சை.. 2006ல் தமிழக சாந்திக்கு என்ன நடந்தது தெரியுமா? கருணாநிதி செய்த சம்பவம்
சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்றைய குத்துச்சண்டை போட்டியில் இத்தாலி வீரர் ஏஞ்சலா கிரினியை தன்னை எதிர்த்து களமிறங்கிய அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃப் ஆண் எனக்கூறி போட்டியின் 46 வினாடியில் விலகினார். இது சர்ச்சையாகி உள்ளது.
இந்நிலையில் தான் 2006ல் தோஹாவில் நடந்த தடகள போட்டியில் வென்ற தமிழகத்தை சேர்ந்த சாந்தியிடம் பாலின சர்ச்சையை காரணம் காட்டி வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டாலும் கூட அப்போதைய முதல்வர் கருணாநிதி ரூ.15 லட்சம் காசோலை, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான டிவி கொடுத்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 26ம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டி வரும் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்றைய போட்டியில் மகளிர் 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கிரினி மற்றும் அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃப் மோதினர். போட்டி தொடங்கிய 46வது வினாடியில் அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃப் வெற்றி பெற்றார்.

அதாவது போட்டியில் இருந்து இத்தாலி நாட்டின் ஏஞ்சலா கிரினி விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி தன்னை எதிர்த்த அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃப் ஒரு ஆண். இதனால் போட்டியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃப் கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் அவர் பெண் என்தற்கான பாலின தகுதிக்கான அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை. இதனை காரணமாக வைத்து நேற்றைய போட்டியில் இத்தாலி நாட்டின் ஏஞ்சலா கிரினி போட்டியில் இருந்து விலகினார். இது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ‛‛நானாக இருந்தால் ஆண்களை, பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைப்பேன்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கும் அதேபோன்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 2006ல் தோஹாவில் நடந்த போட்டியில் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை சாந்தி மீது பாலின சர்ச்சை எழுந்தபோது அவருக்கு அனைத்து பரிசு மற்றும் சலுகைகளையும் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பெற்று கொடுத்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.
2006ல் தோஹாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி பங்கேற்றார். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்காக தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.15 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான டிவி பரிசாக அறிவிக்கப்பட்டது.
இந்த பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் தான் சாந்தி பாலின சர்ச்சையில் சிக்கினார். அவருக்கான பரிசோதனை முடிவில் எதிர்மறைவான முடிவு வந்தது. இதனால் பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை என்பது கருணாநிதி பரிசு அறிவிப்பதாக கூறிய ஒரு நாளுக்கு முன்பு நடந்தது. இதனால் கருணாநிதி அறிவித்த பரிசை அவருக்கு வழங்குவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கருணாநிதி தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கவில்லை.
சாந்தியை நேரில் அழைத்த கருணாநிதி, ‛‛நீங்கள் பெண்ணாக உணர்கிறீர்களா''என்று கேள்வி கேட்டார். அதற்கு சாந்தி ‛‛ஆம்'' என்று பதிலளித்தார். இதையடுத்து கருணாநிதி, ‛‛அப்படியானால் இந்த ரூ.15 லட்சம் பெற நீங்கள் தகுதியானவர்'' எனக்கூறி ரூ.15 லட்சத்துக்கான காசோலை மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான டிவியை பரிசாக வழங்கினார். இதனை கேட்டவுடன் சாந்தி, ‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் என் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கிறேன்" எனக்கூறி கண்கலங்கி கருணாநிதி வழங்கிய பரிசை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக சில அதிகாரிகள் தலையிட்டு, ஆணா, பெண்ணா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், நாம் பரிசளிக்க வேண்டுமா என யோசியுங்கள் என முதல்வருக்கு அறிவுரை கூறியிருந்தனர். ஆனால், கருணாநிதியோ, ‛‛ஓடியது இந்த கால்கள் தானே'' என்ற வார்த்தைகளை கூறி நெகிழ வைத்தார். இந்த கால்கள்தான் ஓடியது, எனவே அந்த ஓட்டத்திற்கு இந்த பரிசு என்பது அதன் பொருளாகும்.
ஆணா, பெண்ணா என்ற பேதம் தேவையில்லை, இவ்வளவு வேகமாக ஓடிய இந்த கால்கள் பரிசுக்கு தகுதியானது என்பது கருணாநிதி கருத்து. கருணாநிதியின் இந்த வார்த்தைகள் அப்போது அதிக கவனம் பெற்றது. அனைவரையும் யோசிக்க வைத்தது.
தடகள வீரர் சாந்தி ஏழ்மை நிலையிலிருந்து வந்தவர். எனவே சாந்தியின் வீட்டில் டிவி கூட கிடையாது. அவரது பெற்றோரே தனது மகளின் ஓட்ட பந்தையத்தை பிறர் வீட்டு டிவியில்தான் பார்த்தனர். அதனை அறிந்து கருணாநிதி ரூ.15 லட்சம் காசோலை மற்றும் ரூ.1.5லட்சம் மதிப்பிலான டிவியையும் சேர்த்து பரிசாக வழங்கி அவருக்கு பக்கப்பலமாக இருந்தார். இது அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications