ரூ.150 கோடி மதிப்பு! 1500 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை! மாஸ் காட்டும் பாரிவேந்தர்
சென்னை: பெரம்பலூர் தொகுதி மக்கள் தன்னை மீண்டும் எம்பியாக தேர்ந்தெடுத்தால் 1500 பேருக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் உயர் அறுவை சிகிச்சையை இலவசமாகச் செய்து தருவேன் என்று பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் மூன்றாவது முறையாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு நாளும் அவர் தேர்தல் களத்தில் விதவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்.
இவர் போட்டியிடும் பெரம்பலூர் சின்ன வெங்காய உற்பத்திக்குப் பெயர் எடுத்த தொகுதியாகும். இதைத் தவிர்த்து மக்காச் சோளம், பருத்தி ஆகிய பயிர்களும் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இங்கே சுமார் 25 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதற்குச் சற்று குறைவாக 20 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தியும் விளைவிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் இந்த மாவட்டத்தில் வாழை சாகுபடியும் நன்றாக உள்ளது.
இதே பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட எறையூர் மற்றும் உடுப்பியம் சர்க்கரை ஆலை தமிழ்நாடு அளவில் பெயர் எடுத்தவையாகும். இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை நடைபெற்று வருகிறது.

இந்தப் பெரம்பலூர் சுற்று வட்டாரத்தில் சிறிய மலைகள் அதிகம் உள்ளன. ஆகவே கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் தயாரிக்கும் 100க்கு மேற்பட்ட ஆலைகள் உள்ளன.
கூடவே எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலை ஒன்றும் இங்கே இயங்கி வருகின்றது. இந்த ஒரு பெரிய நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனங்கள் இந்தத் தொகுதியில் இல்லை.
இந்தப் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1962 தொடங்கி, திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு அதிமுக. அந்த நம்பிக்கையை உடைத்தவர் பாரிவேந்தர்.
இந்திய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கிய நான்கே ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். எடுத்த எடுப்பிலேயே 2,38,887 வாக்குகளை அவர் பெற்றார். புதிய கட்சி ஒன்று இத்தனை வாக்குகளைப் பெறுவது ஒன்றும் சாதாரணமல்ல.

2வது முறை இவர் போட்டியிட்ட போது அப்படியே வாக்குகள் 100% அதிகரித்தது. இந்த 2024 தேர்தலிலும் இவர் களம் காண்கிறார். இவருக்குப் பெரம்பலூர் தொகுதியில் பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை. ஆதரவு அதிகமாகவே உள்ளது.
இவர் திமுக, அதிமுக ஆகிய அணிகளைத் தவிர்த்து, பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். இரண்டு மாநிலக் கட்சிகளை வேண்டாம் என உதறிவிட்டு பாஜகவுடன் கைகோர்த்திருக்கிறார் பாரிவேந்தர்.
அதற்குக் காரணம், அவர் தனது செயல்பாடு மீது வைத்துள்ள நம்பிக்கை. கடந்த முறை தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி உள்ளேன் என்கிறார் இவர். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியைப் போலவே மறுபடியும் நாடாளுமன்ற உறுப்பினரானால் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் மூலம் மொத்தம் 5 வருடங்களுக்கு ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த 1200 மாணவர்களுக்கு இலவசக் கல்வியை மீண்டும் அளிப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.
இந்தத் தொகுதியிலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், 3 மாதத்திற்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் உறுதி மொழி கொடுத்துள்ளார்.
அதைப்போன்று வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 1500 நோயாளிகளைக் கண்டறிந்து தலா 10 லட்சம் ரூபாய் செலவில் உயர் அறுவை சிகிச்சையைத் தனது மருத்துவ நிறுவனம் மூலம் இலவசமாகச் செய்து தருவேன் என்றும் புதியதாக ஒரு வாக்குறுதியை இந்த முறை அளித்துள்ளார். இதன் மொத்த மதிப்பீடு ரூ.150 கோடி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது ஒரு எம்பி தொகுதிக்குள் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு வருடத்திற்கு 50 குடும்பங்கள் வீதம் 6 தொகுதிக்குச் சேர்த்து 300 குடும்பங்கள் வருகின்றனர்.
இந்த எண்ணிக்கையை அப்படியே 5 வருடங்களுக்குச் சேர்த்து கணக்குப் போட்டால் 1500 பேர் வருகிறார்கள். இத்தனை பேருக்கும் இலவசமாக உயர் சிகிச்சை அளிப்பேன் என்கிறார் பாரிவேந்தர். இந்த வாக்குறுதி தொகுதியில் உள்ள பல மக்களைக் கவரக் கூடியதாக மாறி இருக்கிறது.

அதைப்போன்று துறையூர் ஏரி தூர்வாரப்பட்டு, அந்தப் பகுதியில் மின்விளக்குகளுடன் நடைபாதை வசதி அமைத்துத் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பச்சைமலையைச் சுற்றுலாத் தலமாக மாற்ற முழு நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரிவேந்தர் தனது பிரச்சாரத்தின் போது, "மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்துள்ள என்னை ஆதரித்து வாக்களியுங்கள். அதைவிட்டு விட்டு, ஊழல்வாதிகளின் வாரிசுகளுக்கு வாக்களிக்காதீர்கள்.
அவர்கள் ஊழல் செய்த பணத்தைக் காட்டி உங்கள் மனதை மயக்க நினைப்பார்கள். அதை முறியடித்து நல்லவர்களைத் தேர்வு செய்யுங்கள். ஊழல்வாதிகளின் பிள்ளைகளுக்கு வாக்களிக்க வேண்டாம்" என்று அவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 500 வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஐந்தைக் கூட நிறைவேற்றவில்லை. அதைப் பலரும் அறிவார்கள். ஆனால், நான் கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றித் தந்துள்ளேன்.

எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைத் தனிப் புத்தகமாக அச்சடித்துக் கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் என்னைப் போன்று 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் மீண்டும் இந்த முறையும் வாக்கு கேட்க வருகிறார்கள்.
கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை என்னைப்போல அவர்கள் நிறைவேற்றினார்களா? என்னைப்போலப் புத்தகம் அடித்துக் கொடுத்தார்களா? அப்படிச் செய்ய முடியுமா? முடியாது. ஏனென்றால், வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால்தானே புத்தகம் போட முடியும்.
மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வருவது உறுதி. அவர் உலக நாடுகள் எல்லாம் வியக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவராக உள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவருக்குத்தான் வறுமை என்பது என்னவென்று தெரியும். அவரை ஆதரிக்க வேண்டும் நாம். எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் பாரிவேந்தர்.
கூடவே இந்த முறை வெற்றி பெற்றால், தொகுதியில் வாழைப்பழ ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இவர் அளித்துள்ள ரூ.10 லட்சம் செலவில் உயர் சிகிச்சை திட்டம் வேறு எந்தக் கட்சியும் அறிவிக்காத புதுமையான திட்டமாக உள்ளது. பெரம்பலூர் தொகுதி மக்கள் யோசிப்பார்களா?












Click it and Unblock the Notifications