ஜெயித்தே ஆகனும்! நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளுக்கு மநீம குறி! நடிகர் கமல் எங்கு போட்டி தெரியுமா
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை குறிவைத்து காய்நகர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதோடு, அவர் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இந்த 2 தேர்தலிலும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இணைந்தனர்.
நடிகர் கமலும் திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடு குறைந்தது. இதற்கிடையே தான் கடந்த ஆண்டு ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். அதன்பிறகு கமல்ஹாசன் தொடர்ந்து ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே தான் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடிகர் கமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்தது. கமல்ஹாசனும் அங்கு பிரசாரம் செய்தார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டணி என்பது தேர்தல் அறிவித்த பிறகு தான் உருவாகும். இதில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் கட்சி துவங்கி 6 ஆண்டுகள் ஆகியும் ஒரு நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டும் வெற்றியை பெறவில்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நடிகர் கமல் தள்ளப்பட்டுள்ளார். இதனை கமலும் உணர்ந்துள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
அதன்படி நாடாளுமன்ற தேர்தல் பணியை துவங்க கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதாவது சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கமல் ஆலோசனை நடத்தி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முதல் தீர்மானமே 3 நாடாளுமன்ற தொகுதிகளை குறிவைத்து நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள கோவை, தென்சென்னை, மதுரை உள்ளிட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். உடனடியாக இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் பணியை தொடங்க வேண்டும் என்பது தான் அந்த தீர்மானம்.
இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கோவை, தென்சென்னை, மதுரை உள்ளிட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறிவைத்துள்ளது உறுதியாகி உள்ளது. இதில் கமல் ஹாசன் கோவை அல்லது தென்சென்னை தொகுதிகயில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணையும்பட்சத்தில் இந்த தொகுதிகளில் முன்கூட்டியே பணியை தொடங்குவதன் மூலம் அந்த தொகுதிகளை பெறுவதில் சிக்கல் இருக்காது என கமல்ஹாசன் பிளான் போட்டு சைலண்டாக பணியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications