பாஜக-அதிமுகவுக்கு ‛முட்டை’.. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெல்லும் திமுக கூட்டணி! இந்தியா டூடே சர்வே
சென்னை: தமிழகத்தை பொறுத்தமட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது எனவும், 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ‛இந்தியா' கூட்டணி தான் தமிழகத்தில் வெல்லும் எனவும் இந்தியா டூடேவின் ‛மூட் ஆப் தி நேஷன் 2024' சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க வைக்கும் நோக்கத்தில் பாஜகவினர் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.

அதேபோல் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வெளியேறி பாஜகவுடன் இணைந்துள்ளது. இதனால் தற்போது ‛இந்தியா' கூட்டணியில் மொத்தம் 27 கட்சிகள் உள்ளன.
‛இந்தியா' கூட்டணியை பொறுத்தமட்டில் தற்போது மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. கேரளா உள்பட பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தமட்டில் தற்போது வரை அப்படி எதுவும் இல்லை.
தமிழகத்தை பொறுத்தவரை ‛இந்தியா' கூட்டணி என்பது ஆளும் திமுக கூட்டணியாக உள்ளது. தற்போது திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக நடந்து முடிந்து விடும். அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவும் தமிழகத்தில் பலமான கூட்டணி அமைக்கும் முனைப்பில் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களம் காண உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ‛இந்தியா' கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் சீமான் கட்சிகள் என நான்கு முனை போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் என்பது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் ‛இந்தியா' கூட்டணி தான் அனைத்து இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் ‛இந்தியா' கூட்டணி தான் வெல்லும் என இந்த சர்வே தெரிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி தேனி தவிர 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனை ஒப்பிடும்போது இந்த முறை திமுக கூட்டணி என்பது அனைத்து தொகுதிகளிலும் வென்று அசத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இரண்டாக பிரிந்துள்ள அதிமுக கட்சியும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி அமைத்து களமிறங்குவதில் ஆர்வம் காட்டி வரும் அண்ணாமலை தலைமயிலான பாஜகவுக்கும் ஒரு இடங்கள் கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவு என்பது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு பெரிய ஷாக்கை வழங்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications