2 மாநில பயணிகளின் கனவு.. செங்கோட்டை - புனலூர் ரூட்! மொத்தமாக மாறிடுச்சே.. ரயில்வே ஸ்வீட் நியூஸ்!
சென்னை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை- கேரளாவின் புனலூர் வழித்தடத்தில் நேற்று முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப்பாதையில் இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் முழுவதும் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு மலைப்பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் ரம்மியமான சூழலுக்கு நடுவே செல்வதால், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும். ஆங்காங்கே அருவிகள், ஓடைகள் சுற்றிலும் வனப்பகுதிகள் என மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசித்தபடியே இந்த வழியாக செல்லும் ரயில்களில் பயணிக்கலாம்.

செங்கோட்டை - புனலூர்: இதனால், சுற்றுலா பயணிகளும் இந்த வழித்தடத்தில் விரும்பி பயணம் செய்வார்கள். இந்த ரூட்டில் செங்கோட்டை - புனலூர் இடையே மொத்தமுள்ள 49 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையில் இதுநாள் வரையில் டீசல் என்ஜின்கள் வாயிலாகவே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாகவே வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
மின் மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடம் என்றால் கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என்பதால் இந்த திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நேற்றில் இருந்து மின்சாரம் மூலம் இயங்கும் என்ஜின்கள் கொண்டு ரயில் இயக்கப்பட்டது.
கொல்லம் எக்ஸ்பிரஸ்: அதனை தொடர்ந்து அந்த பாதையில் நேற்று முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் (வண்டி எண்) 16101 - 16102 - சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3.20 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தது. இந்த ரயில் மின்சாரம் மூலம் இழுக்கப்பட்டது.செங்கோட்டைக்கு வந்த ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கம், வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
3 மலைக் குகைகள்: செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில், 7 மலைகளை இணைக்கும் வகையில் 8 கண் பாலம், 5 கண் பாலம், 3 கண் பாலங்கள் மற்றும் 3 மலைக்குகைகள் உள்ளன. ஆரியங்காவு பகுதிக்கு செல்லும் வழியில் மலைக்குகை வழியாக ரயில்கள் செல்லும். 49.38 தொலைவு ரயில் பாதையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளது. இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போன்ற உணர்வை சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த ரூட் கொடுக்கும். இந்த வழித்தடத்தில் ரயில் குறைவான வேகத்தில்தான் இயக்கப்படும்.
முதல் ரயில் சேவை எப்போது?: கொல்லம் - செங்கோட்டை இடையேயான 94 கிலோ மீட்டர் ரயில் பாதையில் முதன் முதலாக 1904 ஆம் ஆண்டு நிலக்கரி ரயில்கள் இயக்கப்பட்டன. மீட்டர் கேஜ் பாதையாக இந்த வழித்தடம் இருந்தது செங்கோட்டை - புனலூர் இடையேயான மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக கடந்த 2018-ல் மாற்றப்பட்டது. 2022- ஆம் ஆண்டில் கொல்லம் - புனலூர் வரையில் முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடினமான மலைப்பாதையான புனலூர் - செங்கோட்டை வழித்தடத்திலும் மின்மயமாக்கும் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் கடந்த பிப்ரவரியில் முடிந்த நிலையில், தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மின்மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம் என்றால் கூடுதல் ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
4 ரயில்கள்: செங்கோட்டை - கொல்லம் இடையேயான முழு வழித்தடமும் மின்மயமாக்கப்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் கேரள மாநில பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் தற்போது 4 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை- கொல்லம் விரைவு ரயில், பாலருவி எக்ஸ்பிரஸ், மதுரை - குருவாயூர், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலை தவிர அனைத்து ரயில்களும் மின்சார என்ஜின்கள் கொண்டு இனி இயக்கப்படும். எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் மட்டும் டீசல் என்ஜின்கள் கொண்டு இயக்கப்பட உள்ளது. காரைக்குடி - திருவாரூர் இடையேயான வழித்தடம் இன்னும் மின்மயமாக்கப்படாததால் டீசல் என்ஜின் மூலம் இந்த ரயில் மட்டும் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications