பட்டா மாறுதல்.. தாசில்தார் டூ சர்வேயர்.. டிமாண்டு செய்யும் அரசு ஊழியர்கள்.. எகிறி தப்பிய விஏஓ எங்கே
சென்னை: அரசு அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி சர்வேயர் லஞ்சம் வாங்கியிருந்த நிலையில், இப்போது ராமநாதபுரம், சென்னை என அடுத்தடுத்த அரசு ஊழியர்களும் சிக்கியிருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த பூதிமுட்லுவை சேர்ந்தவர் சுரேஷ்... இவர், தன்னுடைய 4 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் உட்பிரிவு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்..

நீண்ட நாட்கள் ஆகியும், பட்டா மாறுதல் உட்பிரிவு செய்யப்படவில்லை.. இந்நிலையில், பணியை துரிதமாக முடிக்க வேண்டுமானால், அதற்கு 4000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த, வேப்பனஹள்ளி சர்வேயர் ஜெயகாந்த் கேட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி சர்வேயர்
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தரவும், அவர்களது அறிவுரைப்படி ரசாயனம் தடவிய, 4,000 ரூபாயை சர்வேயர் ஜெயகாந்த்திடம் தந்தார்.. அந்த பணத்தை அவர் வாங்கி, தன்னுடைய உதவியாளர் திலீப்குமாரிடம் கொடுத்துள்ளார். இறுதியில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இருவரையுமே கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு விவசாயியிடம் ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, விஏஓ நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் குமிழேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய பகவதி மங்களம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை அணுகியுள்ளார்.
எகிறி தப்பிய ராமநாதபுரம் விஏஓ
அதற்கு விஏஓ ரூ.37 ஆயிரம் கேட்டு, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பணத்தை கொடுக்கச் சொல்லியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த விவசாயி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளிக்கவும், போலீஸாரின் அறிவுரையின்படி, இ-சேவை மையத்தில் அதன் உரிமையாளர் அஹமது ஜப்பிரின் அலியிடம், விவசாயி ரூ.37 ஆயிரம் தந்தார்..
அந்த பணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். ஆனால், அதற்குள் விஷயம் தெரிந்து விஏஓ தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். எனினும், விஏஓ பார்த்திபனை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் நேற்று உத்தரவிட்டார்.
ரூ.5000 கேட்ட சென்னை எஸ்.ஐ.
இந்நிலையில், காவல்துறையிலும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.. பறிமுதல் செய்த அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை திரும்ப ஒப்படைக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து எஸ்ஐ, மற்றும் தலைமை காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில், வின்சென்ட் செல்வகுமார் என்ற கால் டாக்சி ஓட்டுனர், கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பெண் ஓட்டிச்சென்ற டூவீலரில் மோதிவிட்டார். இதனால், அப்பெண்ணுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்
இதையடுத்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, எஸ்.ஐ., லட்சுமணபெருமாள், தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர், வின்சென்ட் செல்வகுமாரிடம், அவரது அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை பறிமுதல் செய்திருக்கிறார்கள்..
அவைகளை மீண்டும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமானால் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.. இதுகுறித்து, வின்சென்ட் செல்வகுமார், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.. இறுதியில் வின்சென்ட் செல்வகுமாரிடம் லஞ்சம் வாங்கியபோது, இருவருமே கைது செய்யப்பட்டனர்.. இப்படி நாள்தோறும் அடுத்தடுத்த அரசு ஊழியர்களும், அரசு அதிகாரிகளும் கைதாகி கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications