ஜிபிஎஸ் முறையில்.. நிலங்களின் உட்பிரிவு பட்டாக்களை வழங்க தமிழக அரசு முடிவு.. ராணிப்பேட்டை துள்ளுது
சென்னை: புவிசார் தகவல்களுடன் ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம், விரைவில் அறிமுகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் பட்டாக்களை பொதுமக்கள் எளிதாக பெறும்வண்ணம் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏனெனில், நிலம் வாங்கும் உரிமையாளர்கள், அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு படாதபாடு படவேண்டியிருக்கிறது.. இதற்காகவே கால நேரம் வீணாகிவிடுகிறது. அதனால், பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது...

இதுபோலவே, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல, உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம். பட்டா பெயர் மாற்றத்தை எளிமையாக்க, "முதலில் வருவோருக்கு முதலில் சேவை" என்ற திட்டத்தை, வருவாய் துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது..
ஜிபிஎஸ் முறை: இப்படிப்பட்ட சூழலில், ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம், விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர், சர்வேயர் வாயிலாக முன்கூட்டியே அளந்து, உட்பிரிவு செய்ய வேண்டும். ஆனால், பத்திரப்பதிவு முடிந்ததும், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் நிலையில், பல்வேறு தலையீடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நில அளவையாளர்: அதனால்தான், புதிதாக வழங்கப்படும் பட்டாவில், சொத்து குறித்த விபரங்களை துல்லியமாக குறிப்பிட, வருவாய் துறை முடிவு செய்திருக்கிறதாம். அதாவது, சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலங்களை, நில அளவையாளர் அளந்து, அதன் 4 எல்லைகளையும் அடையாளப்படுத்திய பிறகே, மேனுவல் முறையில் நில அளவை வரைபடம் தயாரிக்கப்படும். அந்த உட்பிரிவின் 4 பக்கத்திலும் உள்ள சர்வே எண்கள் அல்லது உட்பிரிவுகள் விபரங்கள் குறிப்பிடப்படும்.
இந்த நடைமுறையை, மின்னணுமயமாக்கும் வகையில், அந்த நிலத்தின் ஜிபிஎஸ் எனப்படும், புவிசார் தகவல்கள் சேர்க்கப்படும். அதுமட்டுமல்லாமல், அட்சரேகை, தீர்க்க ரேகையிலிருந்து அந்த நிலம் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்ற விபரங்களும், எப்போது அங்கு நில அளவை செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களும் டிஜிட்டல் முறையில் சேர்க்கப்பட உள்ளதாம்.
பட்டாக்கள்: முதல்கட்டமாக, விருதுநகர், நாமக்கல், பெரம்பலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், உட்பிரிவு பட்டா மட்டுமல்லாது, புதிய பட்டா வழங்குவதிலும், ஜிபிஎஸ் முறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.. இந்த உட்பிரிவு பட்டா கையில் இருந்தாலே, அதில் சம்பந்தப்பட்ட நிலம் எங்கே அமைந்துள்ளது என்ற விபரங்களை, இனி ஆன்லைனிலேயே பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications