“மதுரை மக்களுக்கு இது மிகப் பெரிய வரம்…” கலைஞர் நூலகம் பற்றி பட்டிமன்ற ராசா
சென்னை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஏறக்குறைய ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஜூன் 3 ஆம் தேதி மதுரையில் நூலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அடுத்த நொடியே அசுர வேகத்தில் வேலைகள் தொடங்கின. இன்று மதுரை புதுநத்தம் சாலையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுரடியில் மிகப் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது நூலகம்.

கீழ்த் தளம் மற்றும் தரை தளம் என மொத்தமாக 8 தளங்கள் இதில் உள்ளன. 215 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 3.30 லட்சம் புத்தகங்கள் இங்கு ஒரு குடையில் கீழ் குவிக்கப்பட்டுள்ளன. கட்டடம் கட்டுவதற்கு 114 கோடி செலவிடப்பட்டது.
புத்தகங்களை வாங்குவதற்காக ரூ 60 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. 18 கோடி ரூபாய்க்குத் தளவாடப் பொருட்கள், புத்தக அலமாரிகளுக்காக 1.30 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. தன்வரலாறு, அரசியல், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு, குழந்தை இலக்கியங்கள், அறிவியல், விஞ்ஞானம் என அவை துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூல்களைப் பெறுவதற்காகவும், திரும்ப ஒப்படைப்பதற்காகவும் ஒரு பிரிவு உள்ளது. அடுத்து சொந்தமான பாடநூல்களைக் கொண்டுவந்து படிப்பதற்கான ஒரு தனிப் பிரிவு இயக்க உள்ளது.
மேலும் குழந்தைகள் பயன்பாட்டிற்காக ஒரு பிரிவு, நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்களைப் படிப்பதற்காக ஒரு பிரிவு, கலைஞர் கருணாநிதியின் படைப்புகளுக்காகவே ஒரு தனியான பிரிவு, ஆய்வாளர்களுக்காக ஒரு பிரிவு, அரிய நூல்களுக்காக ஒரு பிரிவு எனப் பல பிரிவுகள் உள்ளன.

இவைத் தவிர போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவே ஒரு பிரிவு, பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரிவு என மிக நேர்த்தியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தரைதளத்தில் கலைக்களஞ்சியம், 200 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளம் குழந்தைகளுக்கானது. இதில் 4 முதல் 12 வயது வரையான பிள்ளைகளைக் கவரும் விதத்தில் ஒலி மற்றும் ஒளிக் காட்சிகளிலான கார்ட்டூன் கதாபாத்திரங்களின் திரை விருந்தும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இதே தளத்தில்தான் கருணாநிதியின் எழுதிய கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் என அவரது படைப்புகளுக்கான தனி பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தளம் முழுவதும் 62 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கியத்திற்கான பகுதி. 3வது தளத்தில் ஆங்கில புத்தகங்களும் ஆராய்ச்சி நூல்கள், இதழ்கள் பிரிவு, தமிழ்நூல்கள் பிரிவுகளும் இயங்க உள்ளன. 4ஆம் தளமானது போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
5வது தளத்தில் நூல்கள் குறிப்புதவி நூல்கள் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கேயே ஒலி, ஒளி காட்சியகப் பிரிவு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 6ஆம் தளமானது நூலகத்தின் நிர்வாகப் பிரிவாக இயங்கும். அதில் நூலக கொள்முதல் பிரிவு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 7ஆம் தளத்தில் வேறு சில பிரிவுகள் இயங்க உள்ளன. மொத்தமாக 8 தளங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.

இந்த நூலகத்தில் வருகையைப்பற்றி மதுரை மண்ணின் மைந்தர்கள் சிலரிடம் பேசினோம். முதலில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா முன்வந்தார். அவர், "நான் மதுரைப் பக்கம் உள்ள கீழமாத்தூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள். எங்களது கிராமத்தில் சின்ன பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அது ஒரு மண் கட்டடம். அதுதான் அந்த ஊர் கிராம நூலகத்திற்கான இடமாகவும் இருந்தது. நூலகத்திற்கு என்று அன்று தனி இடம் எல்லாம் இல்லை.
மாவட்ட நூலகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 30 புத்தங்களை ஒருவர் சைக்கிளில் வைத்துக் கொண்டு வருவார்கள். நான் சொல்வது 1969 அல்லது 70 ஆண்டுகளில் நடந்த கதையை. மாவட்ட நூலகத்திலிருந்து வரும் 30 நூல்களைப் பட்டியல் போட்டு எழுதி, என் அப்பாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

அதைத் திரும்ப அப்படியே எண்ணிக்கைக் குறையாமல் ஒப்படைக்கவேண்டும். அதில் குறை ஏற்பட்டால், விடுபட்ட நூலுக்கான தொகையை எங்கள் அப்பாதான் கட்ட வேண்டும். ஏனென்றால், அவரிடம்தான் பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள், அதற்கு அவரே பொறுப்பாளி.
எனவே எனது அப்பா, நூல்களைக் காப்பாற்றுவதற்காக யாருக்கும் படிக்கவே தரமாட்டார். தொலைந்துவிட்டால் தனக்கு நஷ்டம் என்பதால் அவர் அதில் கண்டிப்பாக நடந்துகொண்டார். நூலகத்திலிருந்துவரும் 30 நூல்களையும் பிரித்துப் படிக்கும் ஒரே வாய்ப்பு எனக்கு மட்டுமே கிடைத்தது.

அந்தக் காலத்தில் நூல்களைத் தேடி வந்து படிக்கும் பழக்கம் மக்களிடம் பரவலாக இல்லை. ஆகவே அதற்கு ஒரே வாசகன் நான் மட்டும்தான். இதில் ஏதேனும் புத்தகங்கள் காணாமல் போய்விட்டால், அதற்காக அடிவாங்குபவனும் நானாகவே இருந்தேன். இந்தக் காலத்தில்தான் நான் அதிகமான புத்தகங்களைப் படித்தது" என்றவர் திரும்ப மதுரை நகரம் தனக்கு வழங்கிய வாசிப்பு அனுபவத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
"நான் கல்லூரி படிப்புக்காக அமெரிக்கன் கல்லூரிக்கு வந்தேன். அங்கே மிகப் பிரம்மாண்டமான நூலகம் ஒன்று இருந்து. இந்தநூலகத்தில் அதிக நேரத்தைச் செலவழித்து இருக்கிறேன்.

என் கல்லூரி காலத்தில் ஊர் சுற்றியது, ரோடுகளில் நின்று வேடிக்கைபார்ப்பது என்ற எந்தப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் நான் ஈடுபட்டதே இல்லை. எனக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் நூலகத்தில் இருப்பேன். படிப்பேன், குறிப்புகள் எடுப்பேன். இதுவே என் பொழுதுபோக்கு.
அதன்பிறகு மதுரை சிம்மக்கலில்தான் மாவட்ட நூலகம் இருந்தது. அங்கே நூலக வார விழா நடத்துவார்கள். அது பெரும்பாலும் இலக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். அங்குதான் நான் முதன் முதலாக சாலமன் பாப்பையா பேச்சுக்களைக் கேட்டேன். இதுதான் அந்தக் கால எனது நூலகம் அனுபவம்" என்றவர் நாளை புதியதாக முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

"எங்கள் அப்பாவுக்கு என்னை ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்பதுதான் கனவு. அந்தக் காலத்தில் போட்டித் தேர்வு எழுதுகின்றவர்கள் படிப்பதற்கு என்று தனியான வசதிகள் கொண்ட நூலகம் எல்லாம் இல்லை. சென்னையில்கூட போதுமான வசதிகள் இல்லை என்றே சொன்னார்கள். அதற்கு எல்லாம் டெல்லிதான் செல்ல வேண்டும்.
ஆனால், இன்றைக்கு கலைஞர் பெயரில் மிகப் பிரம்மாண்டமான நூலகம் கிடைத்திருக்கிறது. முன்பு கலைஞர் கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார். இன்று முதல்வர் ஸ்டாலின் கலைஞர் பெயரில் மதுரையில் கட்டி உள்ளார். சென்னைக்கு மட்டுமே கிடைத்துவந்த வசதி, இனி மதுரைக்கும் கிடைக்க உள்ளது.

இது மதுரையைச் சுற்றியுள்ள எல்லா மாணவர்களுக்கும் வரப்பிரசாதம்" என்றவர் கலைஞரின் தமிழ் ஆற்றல் குறித்தும் படைப்பு திறமைகள் குறித்துப் பேசினார்.
"கலைஞர் என்றாலே முத்தமிழ் என்று அர்த்தம். அவர் வாழ்நாள் முழுக்க வாசித்தார், எழுதினார். அவரது பெயரால் மதுரைக்கு இன்று பெருமை சேர்ந்துள்ளது.
நான் 60களில் பிறந்தவன். எங்கள் காலத்தில்தான் திமுக 1967இல் ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் 'பராசக்தி' திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. அதற்கு முன்னால் காங்கிரஸ் ஆட்சி அதை வெளியிட முடியாமல் முடக்கி வைத்திருந்தது. 'பராசக்தி' ரீ ரிலீஸ் ஆனபோது திமுக மீண்டும் உத்வேகம் பெற்றது.

கலைஞர் நிறைய எழுதினார். அத்தனையும் எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தது. அவரது எழுத்தில் ஒரு நகைச்சுவை இருக்கும். அது பாமரனையும் போய்ச் சேர்ந்தது.
நானே கேள்வி, நானே பதில் என்று எழுதுவார் கருணாநிதி. அதிலிருந்த அங்கதச் சுவைக்கு அளவே இல்லை. அவரது பெயரில் நூலகம் தொடங்குவது சரியான செயல். அதைச் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு என் நன்றி" என்கிறார் ராஜா.
அடுத்து அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளர் அருணன். அவர் என்ன சொல்கிறார்? கேட்டோம்.

"இது கணினி யுகம். அதில் புத்தகங்களைப் படிக்கலாம். நான் மறுக்கவில்லை. ஆனால், மிக அமைதியான ஓர் இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தை மடியில் வைத்துப் புரட்டிப் படிப்பதைப்போன்ற ஒரு சுகம் அதில் வருமா? என்றால், நிச்சயம் வராது என்றே நான் சொல்வேன். ஒரு அரைமணி நேரம் கணினியில் நூல்களைப் படித்தால் கண்கள் எரிச்சல் அடைகிறது. எவ்வளவு நேரம் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்தாலும், கண் தொந்தரவு செய்வது இல்லை. அதுதானே உண்மை?

எனவே நான் சொல்கிறேன், புத்தகம் தரும் சுகமான அனுபவத்தை வேறு எதுவும் தராது. ஆகவே, அதற்காக ஒரு நூலகம் தேவை. கலைஞர் கருணாநிதி பெயரில் மதுரைக்கு ஒரு பிரம்மாண்ட நூலகம் வரப் போகிறது என்பது மிகப் பெரிய பேறு... வரப்பிரசாதம் என்றே நான் சொல்வேன்" என்கிறார் எழுத்தாளர் அருணன்.
ஒரு நூலகம் தொடங்கும்போது அங்கே ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications