கொளுத்திப் போட்ட நெடுமாறன்- வெளியே வந்த பிரபாகரன் மனைவி, மகள் துவாரகா- ஜெர்மனியில் தலைமறைவு?
நெடுமாறன் அறிவிப்பால் பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமுடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பான சர்ச்சை ஓயவில்லை. இருந்த போதும் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மனைவி மதிவதினி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் இலங்கையில் இருந்து தப்பி வெளிநாட்டில்தான் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நெடுமாறனின் இந்த அறிவிப்பு மூலமாக எழுந்த சர்ச்சைகள் உறுதி செய்துள்ளன.
2009-ம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நிகழ்ந்தது. இந்த யுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களது ஆயுதங்களை கைவிட்டனர். அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்தார் எனக் கூறப்பட்டது. ஆனால் இதனை மறுத்து பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் எனவும் கூறப்பட்டு வந்தது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு சந்தரப்பங்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் பிரபாகரன் மதிக்கக் கூடிய மூத்த தலைவர்களில் ஒருவருமான பழ.நெடுமாறன் கூறி வந்தார். ஆனால் இம்முறை, பிரபாகரன் குடும்பத்தின் அனுமதியுடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கிறேன் என பழ.நெடுமாறன் அறிவிப்பு வெளியிட்டார்.
பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரபாகரனுடன் இறுதியாக நின்றவர்கள், பிரபாகரனின் பாதுகாவலர்கள் என பலரும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தும் ஒரு உண்மையை உறுதிப்படுத்துகின்றன. பிரபாகரனின் மனைவி மதிவதினி, பிரபாகரன் மகள் துவாரகா ஆகியோர் ஜெர்மனி அல்லது வேறு ஒருநாட்டில் உயிருடன் இருக்கின்றனர் என்பதைத்தான் இவர்களது கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோரிடமே நெடுமாறன் பேசியிருக்கிறார்; ஆனால் கனடா மற்றும் வேறு சில நாடுகளில் உள்ள பிரபாகரனின் சகோதரி, சகோதரர்கள் இப்படியான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என தடுத்தனர் என்பதும் உறுதியாகி உள்ளது.

இந்த தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டமாக இல்லாமல் ஒரு அரசியல் போராட்டம் தொடங்கப்படலாம்; அதை மத்திய பாஜக அரசு ஆதரிக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறார்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நெடுமாறனின் அறிவிப்பு மூலம் பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருப்பது உலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications