சென்னை மக்களே உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்.. மாநகராட்சி ஆணையா் பேட்டி
சென்னை: சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிா்ப்பதுடன், உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான இது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இன்னும் 12 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு இன்றும், நாளையும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் அலர்ட் காரணமாக இரவில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை மழை
இன்று சென்னையில் 12-20 செமீ வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த 1 மணி நேரமாக சென்னையில் விடாமல் மழை பெய்து வருகிறது. இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி
இந்நிலையில் சென்னையில் எடுக்கப்பட்டுள்ள மழை பாதிப்பு நிவாரணப் பணிகள் தொடா்பாக ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறும் போது, "சென்னையில் 317 இடங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில், 140 இடங்களில் தேங்கி இருந்த மழைநீா் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

மழை நீர் அகற்றம்
177 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 200 வாா்டுகளில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 8,546 பேருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 20 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
Recommended Video

அச்சப்பட தேவையில்லை
நவம்பா் 10, 11, 12 ஆகிய நாள்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும், தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிா்ப்பதுடன், தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

200 வார்டுகள்
மழை நீரை வெளியேற்றும் பணியில் கூடுதல் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய வாா்டுக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் 200 வாா்டுகளுக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உணவு வழங்க ஏற்கெனவே ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீா் அதிகம் தேங்கும் 41 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு இயக்குபவருடன் கூடிய படகு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 3,400 மலேரியா பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்" என்றாா்.












Click it and Unblock the Notifications