தமிழகத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.. கேரளாவை போல் விழிப்போடு இருப்போம்.. நம்மை நாமே காப்போம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வீடுகளில் இருப்பதன் அவசியத்தை, பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டிய பிறகாவது உணருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
Sars- CoV-2 எனப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கே புதுமையானதாக உள்ளதால் அதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவிலும் கொரோனா பரவியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எத்தனை கோடி
எனினும் பெரும்பாலான மக்கள் அரசின் உத்தரவை மதிப்பதில்லை. இதனால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 1000-ஐ தாண்டியுள்ளது. தொழிற்சாலைகள், மால்கள், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள், கோயில்கள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் எத்தனை கோடி இழப்பு ஏற்படும் என்பதை தெரியாத மக்கள் இது போல் வெளியே சுற்றித் திரிகிறார்கள்.

மக்கள் நலன்
தமிழகத்தில் அதிக வருவாயை ஈட்டிக் கொடுப்பது டாஸ்மாக்தான். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, வார இறுதி நாட்கள் உள்ளிட்ட காலங்களில் வருவாய் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும். ஆனால் அந்த வருவாயை பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தி அவற்றை மூடியது.

கெஞ்சிய போலீஸார்
குடிக்க முடியாத விரக்தியால் சிலர் ஷேவிங் லோஷன், சானிடைசர் உள்ளிட்டவற்றை குடித்துவிட்டு உயிரை விட்ட நிலையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க மறுப்பு தெரிவித்த அரசு, அதை காட்டிலும் மோசமான கொரோனாவின் சமூகப் பரவலை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக சொல்லப்படுவது, சமூக விலகல். வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்ற உத்தரவை மீற வேண்டாம் என போலீஸார் அடித்து பார்த்தாச்சு, கெஞ்சியும் பார்த்தாச்சு, ஆனால் நாம் தான் கேட்பதாக தெரியவில்லை.

குடும்பத்தினர்
அரசுக்கு நம் மீது இருக்கும் அக்கறை கூட நமக்கு நம் மீதோ நமது குடும்பத்தினர் மீதோ இருப்பதில்லை என்பதையே இந்த விதிமீறல்கள் காட்டுகின்றன. காய்கறி, மளிகை சாமான்கள் வீடுகளுக்கே வந்து சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும் நம் கையால் வெளியே போய் வாங்கினால்தான் அது நன்றாக இருக்கும் என நினைப்பதை நாம் எப்போதுதான் கைவிட போகிறோம்?

அவசியம்
தொழிற்சாலைகள் மூடல், கூலி வேலை செய்யும் தொழில்களும் மூடல், அவ்வாறிருக்கையில் எங்குதான் செல்கிறார்கள் என்றே தெரியவில்லை. மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே நாம் வெளியே வர வேண்டும். அரசு என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தாலும் நாம் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் கொரோனாவை எப்படி தடுக்க முடியும்? ஊரடங்கிற்கு மறுத்த வல்லரசு நாடு அமெரிக்கா, ஊரடங்கை மதிக்காத இத்தாலியின் நிலையை நினைத்து பாருங்கள்.

சுற்றி திரிதல்
இப்படியே ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றித் திரிவதால் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே சென்றால் கூலித் தொழிலையே நம்பியுள்ள ஏழைகள் எப்படி பிழைக்க முடியும்? அவர்கள் 3 வேளை உணவுக்கு என்ன செய்வார்கள்? இந்தியாவில் 200 பேர் வரை பலியாகிவிட்டனர். இதை பார்த்தும் கொஞ்சமும் அச்சமின்றி வெளியே சுற்றினால் எப்படி? பொருளாதார வீழ்ச்சியால் அரசு கஜானாவில் பிரச்சினை ஏற்பட்டால் அது யார் தலையில் விழும் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே பொறுப்புள்ள குடிமகனாக வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

சோகம்
இந்த கொரோனா ஊரடங்கால் வேறு காரணங்களுக்காக இறந்த தங்கள் அன்புக்குரியவர்களை பார்க்காமல் வீடியோ கால் மூலம் சடலத்தை பார்த்தும் அழும் சோகத்தை பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா, தங்கள் உயிரை பணயம் வைத்து எத்தனை மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு கூட செல்லாமல் தங்கள் குழந்தைகள், தாய், தகப்பன், சகோதரர், கணவர் யாரையும் பார்க்க முடியாமல் நம் உயிரை காக்க போராடுகிறார்கள். மருத்துவராக, செவிலியராக இருக்கும் தனது தாயை மருத்துவமனையிலாவது காணலாம் என வரும் குழந்தைகள் தாயை பார்த்தும் அழுவதும், தாய் தனது குழந்தைகளை கட்டியணைக்க முடியாமல் தவிப்பதும் ஊடகங்களில் பார்த்தும் மனம் இறங்காவிட்டால் எப்படி?

எண்ணி பாருங்க மக்களே
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1075 ஆக உயர்ந்துவிட்டது. இப்போதாவது மக்கள் பொறுப்புணர்வுடன் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வராமல் இருக்க வேண்டும். நாம் ஒருவரின் சந்தோஷத்திற்காக இந்த சமூகமே பாதிக்கப்பட வேண்டுமா என்பதை கொஞ்சமாவது எண்ணி பாருங்கள் மக்களே! கேரள மக்களை பாருங்கள், பாதிப்பு எண்ணிக்கை 2 ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 9ஆவது இடத்திற்கு சென்றுவிட்டது. இதெல்லாம் என்ன ஜூபூம்பா போல் நடந்துவிட்டதா, மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் அரசின் அறிவுரைகளை கேட்டு நம்மால் உதவ முடியாவிட்டாலும் சமூகத்திற்கு எந்த கெடுதலையும் ஏற்படுத்த கூடாது என நினைத்ததால்தான். ஒரு உயிரை காப்பாற்ற நாம் காரணமாக இல்லாவிட்டாலும் ஒரு உயிர் போக நாம் காரணமாகிவிடக் கூடாது என்பதை மனதில் நிறுத்துங்கள்.

அரசின் பொறுப்பு
வீடுகளை விட்டு வெளியே வரும் மக்களை போலீஸார் விசாரிக்கும் போது தாங்கள் காய்கறி, மளிகை வாங்க வருவதாக கூறுகிறார்கள். அதுதான் நடமாடும் காய்கறிகள், டோர் டெலிவரியில் மளிகை பொருள்கள் இருக்கிறதே என போலீஸார் கூறினால் அதற்கு அவர்கள் எங்கள் பகுதிக்கு அந்த வசதி வரவில்லை என்கிறார்கள். எனவே அரசும் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடமாடும் காய்கறி கடைகள், மளிகை கடைகளை அதிகரிக்க வேண்டும். கேரளாவில் மக்கள் அரசின் அறிவிப்புகளையும் நோயின் தன்மையையும் புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இவர்களை போல் நாம் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் இந்த நோய் இன்னும் பல்கி பெருகிவிடும் என்பதை இப்போதாவது உணர்வோம். இனியாவது விழித்துக் கொண்டு வீட்டிலேயே இருப்போம். அவ்வாறு இருந்தால் போலியோ நோயை போல் கொரோனாவையும் தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications