நகைக்கடனுக்கு ரிசர்வ் வங்கி போட்ட புதிய ரூல்ஸ்.. இனி தங்கம் விற்பனையே குறையலாமாம்!
சென்னை: தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. தங்கம் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது நடுத்தர மக்களிடையே மிகப்பெரிய சோகமாக இருந்து வரும் சூழலில், இனி நகைக்கடன் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் வகையில் விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக்கடனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தங்க நகைக்கடன் வாங்குவோர், நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்ற ஆதாரத்தை அளிக்க வேண்டும். தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும். அதேபோல் நகைகள் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். தனி நபர்கள் இனி ஒரு கிலோ வரை மட்டுமே நகை அடகு வைக்க முடியும்.

நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல் நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகைகளை ஒப்படைக்க வேண்டும். 7 நாட்களில் ஒப்படைக்கவில்லை என்றால், ஒரு நாளைக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்க நகைகளை அடமானம் வைத்தவர்கள், ஓராண்டிற்குள் முழுதொகையையும் செலுத்திய பிறகே மறு அடகு வைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அடகு கடைகளை நோக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மை நடுத்தர வர்க்க மக்களின் முதலீடாக தங்கம் மட்டுமே உள்ளது. ஏதாவது அவசரம் என்றால், உடனடியாக தங்கத்தை வங்கி அடகு வைத்து பணம் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நகைகளுக்கான ஆதார சான்றிதழ், தூய்மைத்தனமை சான்றிதழ் ஆகியவை பொதுமக்களுக்கு கூடுதல் சிரமத்தை கொடுப்பதாகும்.
வட்டி கடைகளை நாடி மக்கள் செல்ல தொடங்கினால், ஒரு கட்டத்தில் அவர்களால் நகைகளை திருப்ப முடியாத நிலை உருவாகும். இதனால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவதையே வரும் காலங்களில் குறைத்துவிடுவார்கள் என்று முத்தூர் ஃபைனான்ஸ் நிர்வாகி ஜார்ஜ் எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் ஏராளமான சிரமங்களை சந்திப்பார்கள் என்று பல்வேறு நகைக்கடை உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications