Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் தொகுதியில் திமுகவின் வெற்றி முகம்! - யார் இந்த சத்தியவாணி முத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் விஜயின் பெரம்பூர் சட்டசபை தொகதியின் திமுகவின் வெற்றி முகமாக திகழ்ந்த சத்தியவாணி முத்து யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், பெரம்பூர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் திமுகவின் வெற்றி முகமாக இருந்தவர் சத்தியவாணி முத்து. 1923இல் பிறந்த இவருக்கு 2023இல் நூற்றாண்டு விழா நிறைவடைந்தது.

perambur-who-is-this-sathyavani-muthu-the-woman-who-is-dmk-winning-face-in-vijays-constituency

சத்தியவாணி முத்துவை 'இரட்டைக் குழல் துப்பாக்கி' என்றார் அண்ணாதுரை. அவர் திகவிலும் திமுகவிலும் ஒரே சேர இயங்கியவர். பிராமணரல்லாதோர் இயக்கத்தில் இணைந்த முன்னணி பெண். 1957இல் திமுக சார்பில் சத்தியவாணி முத்து சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, அண்ணாதுரையுடன் சட்டசபைக்குள் நுழைந்து அதிகாரம் மிக்க பதவியில் முதன்முதலாக அமர்ந்தார்.

அண்ணாதுரையின் அமைச்சரவையில் முதன்முறையாக ஹரிசன நலத்துறைக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. தனி அமைச்சராக அத்துறைக்கு சத்தியவாணி முத்து அமர்த்தப்பட்டார்.

அண்ணாவுடன் பணி

சத்தியவாணி முத்து ஒரு சீர்திருத்தவாதி. சாதி ஒடுக்கு முறைக்கு எதிரானவர். பட்டியலினத்தவர் மீது அதீத அக்கறை கொண்டிருந்தவர். டாக்டர் அம்பேத்கர் பட்டியலின முன்னேற்றத்திற்காக அமைப்பாகத் திரண்டபோது, சென்னையை மையமாக வைத்துக் களமாடியவர். அம்பேத்கர், பூனா ஒப்பந்தத்தை எதிர்த்துப் போராடிய போது அதில் பங்கேற்றவர்.

இவரது திருமணம் 1943இல் 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க தலைமையில் நடந்தது. இவர் மணவிழாவுக்கு அண்ணாதுரை வரவில்லை. அவர் கம்ப ராமாயணம் புத்தகத்தைக் கொளுத்தும் போராட்டத்திற்காகச் சேலம் போய் இருந்தார்.

1949 திமுகவை அண்ணாதுரை தோற்றுவித்தார். ஆனால், கழகத்திற்குள் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் 'திராவிட முன்னேற்றக் கழகம்' சார்பில் 'மகளிர் மன்றம்' என்ற அணியை 25.01.51இல் கட்டி எழுப்பினார். அதை அண்ணாவே தொடங்கிவைத்து உரையாற்றினார். அதில், ஜானகி ராமச்சந்திரன், ராணி அண்ணாதுரை, பார்வதி கண்ணதாசன், வெற்றிச்செல்வி அன்பழகன் எனக் கழகத் தலைவர்களின் மனைவியரை அமைப்பாகத் திரட்டியவர் இவர். திமுகவின் முதல் மகளிரணி இதுவே.

ஹோமியோபதி மருத்துவர்

சத்தியவாணி ஒரு ஹோமியோபதி மருத்துவர். அவரது தந்தை நாகைநாதன் நீதிக்கட்சி செயற்பாட்டாளர். பின் சுயமரியாதை இயக்கத்தில் களப்பணி செய்த நாளில் தன் மகளை இயக்கச் செயல்பாட்டிற்காக கையோடு அழைத்துச் சென்ற பிற்போக்குவாதி. ம.சு. முத்து என்பவருக்கு மகனை மணமுடித்து வைத்தார். முத்துவின் தீவிர காங்கிரஸ் குடும்பம். பெத்தநாய்க்கன் பேட்டையில் கத்தேரங்கய்யா நாயுடு, ம.பொ.சி போன்றவர்களுடன் முத்துவின் குடும்பம் நெருங்கிய உறவு கொண்டிருந்தது.

ம.சு.முத்து 1938 ஈ.வெ.ரா முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வாயிலாகச் சுயமரியாதை உணர்வு பெற்றார் முத்து. 1944இல் தென்னிந்திய நல உரிமைக் கழகம் திராவிடக் கழகமாகப் பெயர் மாறியபோது தன் கணவருடன் கைகோத்துக் கொண்டு பங்கேற்றவர் சத்தியவாணி முத்து.

அண்ணா அமைச்சரவையில் இடம்பெற்ற முத்துவின் மனைவியின் உரை வீச்சைக் கண்டு ம.பெ.சியே வியந்துபோனார். சிறப்பாகப் பேசக் கூடியவர்கள் 'வெள்ளி நாக்கு' பெற்றவர்கள் என்பர். அதை சத்தியவாணியின் பேச்சில் மூலம் நேரில் உணர்ந்தேன் என்பார் மூத்த அரசியல்வாதி ஹண்டே.

கருணாநிதியை முதல்வராக்கியவர்

அண்ணா புற்றுநோய்க்கு இரையாகியதும், ஆட்சி அதிகாரத்திற்கு அடுத்து யார்? என விவாதம் வெடித்தபோது, ஒலித்த முதல் ஆதரவு குரல் சத்தியவாணி முத்து. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து கருணாநிதியை முதல்வராகத் தேர்வு செய்தார்.

அண்ணா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த வேளையில் தன் அமைச்சரவையிலிருந்து முதல் அயல்நாட்டுப் பயணத்திற்கு முன்மொழிந்து அனுப்பியது சத்தியவாணி முத்துவைதான். அண்ணா அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே டாக்டர் சத்தியவாணி முத்து. அடுத்து கருணாநிதி முதல்வர் பொறுப்பை ஏற்றபோது கோட்டையில் தொங்கிய தன் பெயர்ப் பலகையில் ஒட்டிக்கொண்டிருந்த டாக்டர் என்ற பட்டத்தை அழித்துவிட்டு வெறும் சத்தியவாணி முத்தாக ஆக மாறினார். 'கட்சியில் ஒரே மருத்துவர்தான் இருக்கிறார்' எனச் சமாதானம் சொன்னார்.

திமுக நடத்திய எந்த மாநாடாக இருந்தாலும் சத்தியவாணி முத்துவின் கொடிதான் பறக்கும். என்ன புரியவில்லையா? அவர்தான் கொடியேற்றி வைப்பார். அண்ணாதுரை காலத்தில் கூடிய திமுக வேலூர் செயற்குழு கூட்டம் மிக முக்கியத்துவமானது. அங்கேதான் ஈ.வெ.கி சம்பத் தன் அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்பதவிக்கு சத்தியவாணி முத்து தேர்வு செய்யப்படுவார் எனச் செய்தி கசிந்தது. இறுதியில் அண்ணாவே அப்பொறுப்பை ஏற்றதால், வாய்ப்பு நூலிழையில் தவறியது.

சத்தியவாணியின் வெற்றி முகம்

1971இல் கருணாநிதி அமைச்சரவையில் பட்டியலின நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை எனப் புகார் கூறியதால் அரசியல் பகை மூண்டது. பதவியிலிருந்து நீக்கப்பட்டார் இவர். பின் 1974இல் கழகத்திலிருந்து வெளியேறிய பின், 1976இல் ஆட்சிக் கலைக்கப்பட்டது. இவரோ 'தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' தொடங்கி, செயல்பட்டார். பின் எம்.ஜி.ஆரின் அதிமுகவில் கட்சியைக் கரைத்துவிட்டார்.

1972இல் எம்.ஜி.ஆரை திமுகவை விட்டு வெளியேற்றியபோது. அதை நியாயப்படுத்தி சென்னை மெரினாவில் திமுக பொதுக்கூட்டம் நடத்தியது. அதில், "கழகத்திற்காக உயிரையும் இழப்போம். கழகத்தை இழக்க மாட்டோம்' எனச் சினம் கொண்டவரையே சீண்டினார் கருணாநிதி. விளைவு விமர்சித்தவர் கட்சிக்கே போய்ச் சேர்ந்தார் சத்தியவாணி முத்து. அறிந்தும் எம்ஜிஆர் தன் கட்சியில் இவரை நல்ல மதிப்புடன் நடத்தினார். அவைத்தலைவர் பதவியைத் தந்தார். பிரதமர் சரண் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார்.

பெரம்பூரில் அசைக்க முடியாத எம்எல்ஏ

1957 முதல் 1962வரை, 1967 முதல் 1971 வரை, மீண்டும்1971 முதல் 1976 வரை பெரம்பூர் தொகுதியின் அசைக்கமுடியாத சட்டமன்ற உறுப்பினர் சத்தியவாணி முத்துதான். 1967 முதல் 1974 வரை அமைச்சராக நாற்காலியில் அமர்ந்திருந்தவர்.

இவர் பட்டியலினத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் (1971) ஒரகடத்தில் 'அண்ணா அனாதை இல்லம்' துவங்கினார். 'அம்பேத்கர் கலைக் கல்லூரி'யை உருவாக்கினார். பதவி வாழ்வு மட்டுமே இவரது சிறப்பல்ல; திராவிட இயக்க கொள்கைக்காக 9 முறை சிறை சென்றவர். 1938இல் ஹிந்தி எதிர்ப்பு, 1953இல் மும்முனைப் போராட்டம், 1962இல் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் எனத் தீவிரம் காட்டியவர். 1965இல் இரண்டு வயதுக் குழந்தையுடன் சிறைக்குச் சிரித்த முகத்தோடு சென்ற பெருமை பெற்றவர்.

- எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+