பெருங்களத்தூர் பிஸி.. மீண்டும் கோயம்பேடு.. நெரிசலில் கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம்.. ஸ்தம்பித்த சென்னை
சென்னை: இன்றும் விடுமுறை என்பதால், சென்னையின் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
வழக்கமாக வார விடுமுறை என்றாலே சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம். இதுவரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பி சென்றிருந்த நிலையில், தற்போது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர் பயணமாகிறார்கள்.

அந்தவகையில், இப்போது தொடர்ந்து விடுமுறை என்பதால், கிளாம்பாக்கத்தில் நேற்றிரவே ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சிக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
ஆத்திரம்: இதுதொடர்பாக கேட்டபோதும், போக்குவரத்து கழக அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லையாம். அதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றக்கணக்கானோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடங்கியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதற்கு பிறகு போக்குவரத்து துறை விளக்கம் ஒன்றை தந்திருந்தது.
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, பேருந்துகள் இயக்கம் சரி செய்யப்பட்டு, இறுதியில் போக்குவரத்து சீராகியுள்ளது. எனினும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன..
சரியான திட்டமிடல் இல்லை என்று அதிமுக எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். பாஜக அண்ணாமலையோ, போராட்டத்தையே நடத்த போவதாக சொல்லி உள்ளார். அரசியல் ரீதியாகவும் இந்த பிரச்சனை எதிரொலித்துள்ளதால், மிகப்பெரிய பிரச்சனையாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு உருவெடுத்துள்ளது.
நெரிசல்: இதனிடையே, இன்று இரவு 8 மணி முதல் கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் என்றும், தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் பிஸியாகி உள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் போலவே, இன்றைய தினமும் சென்னையின் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.. குறிப்பாக, சென்னை அருகே கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை, நாளை சுபமுகூர்த்தம் என்பதால் அதிக வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கி செல்கின்றன.
கிளாம்பாக்கம்: அந்தவகையில், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் என சுமார் 10 கி.மீ. தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதால், போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications