பெருங்களத்தூர் பிஸி.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் "டம்ளர்" வைக்கலியாமே.. கிளாம்பாக்கத்தில் புலம்பல்
சென்னை: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினால், ஒருசில நடைமுறை சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை கடந்த 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. இதையடுத்து, நேற்று முதல், இந்த பஸ் முனையம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.. சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பஸ்கள் உட்பட எல்லா பஸ்களுமே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட்டன.

பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்களை 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என சிஎம்டிஏ அறிவித்திருக்கிறது என்றாலும், ஒருசில நடைமுறை சிக்கல்களும், குழப்பங்களும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பேட்டரி கார்கள்: நேற்று அதிகாலையிலேயே பயணிகள் பஸ் நிலையத்தில் இறங்கியதுமே, பேட்டரி கார் வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டனர்.. பேட்டரி கார்கள் செயல்பாட்டில் உள்ளது என்றாலும் அதிகாலை நேரத்தில் சேவையில்லை.. அதேபோல, உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கும் சிக்கல் உள்ளது.. ஒரு சில உணவகங்களை தவிர பெரும்பாலான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை..
அங்கிருக்கும் குடிநீர் குழாய்களிலும் இன்னும் தண்ணீர் வரவில்லையாம். இதனால் கைக்குழந்தைகள், வயதானவர்கள் அவதிக்கு ஆளாகும் நிலை உள்ளதாம். பஸ் ஸ்டாண்டில் பல்வேறு இடங்களில் குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டிருந்தாலும், அந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கு டம்ளர் வைக்கப்படவில்லையாம்.. 108 ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை, மாறாக தனியார் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது... அந்த ஆம்புலன்ஸ் கட்டண சேவையாக உள்ளது.
ஆட்டோக்கள்: அதேபோல, ஜிஎஸ்டி சாலையில் ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படாவிட்டால், பஸ் ஸ்டாண்டு முழுவதும் நெரிசல் ஏற்பட்டுவிடும் நிலைமை உள்ளதாம்..
வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைவதால் வரும் நாட்களில் அதிக அளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்பதால், இதற்கும் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இல்லாவிட்டால் இந்த இடம் இன்னொரு பெருங்களத்தூர் சந்திப்பாக மாறிவிடும் என்கிறார்கள்.
ஓட்டேரி: ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜிஎஸ்டி சாலையை, ஆபத்தான முறையில் பயணிகள் கடக்க வேண்டியிருப்பதால், நடைமேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று அடுத்த கோரிக்கை கிளம்பி உள்ளது. எந்த பஸ்கள், எந்தெந்த ரூட்களிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கும் வகையில் ஸ்பீக்கர் வசதி அமைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே, கிளாம்பாக்கம் பஸ் முனையத்தின் முன்பகுதியில் ஜிஎஸ்டி சாலை ஒட்டிய பகுதிகளில் தினமும் 3 ஷிஃப்டாக போக்குவரத்து போலீஸார் 75 பேர் பணியாற்றி வருகிறார்கள்.. ஆனால், இவர்களுக்கு இளைப்பாற வசதி இல்லை.. அதனால், பேருந்து நிலையத்தின் உள் பகுதியில் சட்டம் -ஒழுங்கு போலீஸாருக்கு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது..
டிராபிக் போலீஸ்: இதுபோலவே, போக்குவரத்து போலீஸாருக்கும் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை போக்குவரத்து போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.. ஏற்கனவே, ஜிஎஸ்டி சாலையில் பயணிகள் சாலையை கடக்கவும், பஸ் நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து சேரவும் இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications