பீட்டா! பீட்டா! மூக்குடைஞ்சதா லேட்டா- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி- உச்சநீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பு!
சென்னை: தமிழ்நாடு நிலத்தின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வை எப்படியாவது தடை செய்துவிட வேண்டும் என்று கடைசி வரை முட்டி மோதிய பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்புக்கு நோஸ்கட் தரும் வகையில் உச்சநீதிமன்றம் இப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
2017-ம் ஆண்டு மெரினாவில் மாணவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு அனுமதி கோரி தொடங்கிய புரட்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஒருங்கிணைத்தது. அன்று மெரினா முதல் தமிழ்நாட்டு குக்கிராமம் வரை தமிழர் நிலத்தின் மொத்த கோபத்துக்கும் உள்ளானது பீட்டாதான். பீட்டா அமைப்புக்கு எதிராகத்தான் மெரினா புரட்சி எனும் தமிழர் புரட்சியின் மைய முழக்கமே இருந்தது.

பீட்டா என்பது என்ன? பீட்டா ஒரு என்ஜி ஓ. வெளிநாட்டு நிதி உதவி பெறுகிற அமைப்பு. விலங்குகள் நலனை மையமாக கொண்டு செயல்படக் கூடியது. இது தமிழர் அல்லாதவர்களால் நிர்வகிக்கப்படுகிற தன்னார்வ அமைப்பு. அத்துடன் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் மீதான வரலாற்று வன்மம் கொண்டவர்களைக் கொண்டதும் இந்த பீட்டா. அரசமைப்புகளில் தங்களுக்கு இயல்பாகவே கிடைக்கக் கூடிய செல்வாக்கை செலுத்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை வாங்கியது பீட்டா. சட்டப்பூர்வமாகவே இத்தடையை வாங்கி இருந்தது பீட்டா.
இத்தடையை உடைத்து எறியத்தான் வேண்டும் என்பதில்தான் ஒட்டுமொத்த தமிழர் நிலமும் 2017-ல் புரட்சியில் இறங்கியது. சென்னை மெரினாவிலும் சரி தமிழ்நாட்டின் குக் கிராமங்களிலும் சரி அன்று பீட்டா அமைப்புக்கு எதிராக விண் அதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால்தான் ஜனாதிபதி ஒப்புதலுடன் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும் வெறி அடங்காத பீட்டா, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது; சித்ரவதை செய்யப்படுகிறது; 5 ஆண்டுகாலம் ஆய்வு செய்து தரவுகளைத் தருகிறோம் என்றெல்லாம் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டுப் பார்த்தது பீட்டா.
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ஒவ்வொரு நிகழ்விலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதற்காக ஒட்டுமொத்தமாக அத்தனையையும் தடை செய்யவா முடியும் என டோஸ்விட்டது. இப்போது இறுதித் தீர்ப்பும் வந்துவிட்டது. ஜல்லிக்கட்டு என்பது தமிழரின் கலாசார நிகழ்வு- இதனை மாநில அரசுதான் தீர்மானிக்கும்; நாங்கள் தலையிட முடியாது என பீட்டாவின் செவுளில் அறைந்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டு நிகழ்வுகள நடத்தும் சட்டத்துக்கு ஜனாதிபதியே ஒப்புதல் தந்துவிட்டார்; அந்த சட்டமும் அரசியல் சாசனத்துக்குட்பட்டதுதான். அதில் தலையிட முடியாது. தமிழ்நாடு அரசின் சட்டம் முழுமையாக அமல்படுத்தியாக வேண்டும் என வரலாற்று பெருமிதத்துக்குரிய தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் பீட்டாவின் மூக்குகளை சில்லு சில்லாக உடைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது! வென்றது தமிழர் கலாசாரம்! வீழ்ந்தது பீட்டா எனும் தமிழர் விரோதம் என்ற தமிழ் ஆர்வலர்கள் முழக்கம் மிகையானது அல்ல!












Click it and Unblock the Notifications