விலங்குகளுக்கு ஆபத்து.. தமிழக அரசு அறிமுகம் செய்த ‘டிரெக் தமிழ்நாடு’ திட்டத்தை தடை செய்யக் கோரி மனு!
சென்னை: தமிழ்நாடு வனத்துறை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மலையேற்ற திட்டமான "டிரெக் தமிழ்நாடு" திட்டம் வன விலங்குகளுக்கு தீங்காக அமையும் என்பதால் அந்தத் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மலையேற்றம் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்காக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பயணத் திட்டத்தை (டிரெக் தமிழ்நாடு) அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் மலையேற்றத்தை அனுமதிக்கும் போது அதிக எண்ணிக்கையில் மனித நடமாட்டம் ஏற்படும். அதன் காரணமாக விலங்குகள் உணவு தேடும் நடவடிக்கை, இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.
மேலும், மனிதர்கள் மூலம் வன விலங்குகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மலையேற்றத்திற்கு செல்பவர்கள் எடுத்துச் செல்லும் உணவுகளின் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வனப்பகுதியில் விட்டு திரும்பக்கூடும் என்பதால் வனம் மாசடைய வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக விலங்குகள் காயமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, வனப்பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிடும் படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications