சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வீட்டின் மீது அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீச்சு! சீர்காழி அருகே ஷாக்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு பகுதியில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கணேசன். இன்று இரவு கணேசன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் மூன்று பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியுள்ளார். இதில், காவல் உதவி ஆய்வாளர் கணேசன் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.

2 தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சூழலில் தான் சீர்காழி அருகே போலீசார் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையினர் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் ஆங்காங்கே குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தாலும் குற்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் இன்னும் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து குற்ற செயல்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications