பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 6 டூ 12 வரை உடற்கல்வி வகுப்பு கட்டாயம்.. ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன அரசு
சென்னை: தமிழக பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடற்கல்வி பாடவேளைகளை பிற பாடங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகப் படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு உடற்கல்வியும் முக்கியம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உடற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், உடற்கல்வியால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும், உடல் திறனும் மேம்படும், இதனால், கல்வித் திறனும் இயல்பாகவே அதிகரிக்கும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால், பள்ளிகளில் பி.இ.டி (PET) வகுப்புகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை. பிற வகுப்புகள் நடத்த கடன் கேட்டால், பி.இ.டி வகுப்புகளை தாரைவார்த்துவிடுகிறார்கள் என்பதே மாணவ மாணவிகள் கூறும் கருத்தாக இருக்கிறது. இது பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. பள்ளிக் கல்வித்துறை போதிய அறிவுறுத்தல் கொடுத்தாலும் பெயரளவுக்கு மட்டுமே இந்த விதிகள் இருப்பதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறை கூறுவதை பார்க்க முடிகிறது.
தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், பள்ளிக் கல்வித்துறைக்கும் உத்தரவு ஒன்று பறந்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
அதேபோல், சிறப்பு விளையாட்டுகள் குறித்து பயிற்சிகளும் அளிக்க வேண்டும் எனவும், கணிதம், அறிவியல் என பிற வகுப்பு டீச்சர்கள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட பாடவேளையை கேட்டால் தாரைவார்க்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அரசின் இந்த உத்தரவு மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இதனை பெயரளவுக்கு மட்டுமே கடைபிடிக்காமல் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், இதனை கல்வித்துறை அவ்வப்போது கண்காணித்து உரிய அறிவுறுத்தல்களை விடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications