கோயில் திருவிழா.. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்கு பாதிப்பு? நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள கோயில் திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் ஆதிகருவன்நாராயர் பொம்மதேவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இதனிடையே, இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் குவிவதால், புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, கோவையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருவிழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நிர்ணயிக்கும்படியும், அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம், "திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுகிறது. விழாவில் பலியிடும் விலங்குகளின் கழிவுகளை மக்கள் அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பட்டாசுகள் வெடிப்பதாலும், விறகுகளை பயன்படுத்தி சமைப்பதாலும் சரணாலயத்தில் மாசு ஏற்படுகிறது" என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகுமார், "கோயில் விழாவுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பிறகே, பக்தர்களுக்கு வனத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. திருவிழாவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications