வருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா? படிவம் 16 மட்டும் போதாது, இந்த 5 ஆவணங்கள் மிக முக்கியம்
சென்னை: வருமான வரித் துறை 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தாக்கல் செயல்முறைகளை தொடங்கியுள்ளது. வரி செலுத்துவோர் ஜூலை 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்குகளை துல்லியமாக சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். வரி ஏய்ப்பை தவிர்த்து, அபராதமின்றி தாக்கலை முடிக்க தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
வருமான வரி கணக்கு தாக்கல் (ITR) செய்யும் 2026-27 நிதியாண்டிற்கான செயல்முறை தற்போது தீவிரமடைந்துள்ளது. வருமான வரித் துறை தனது வெப்சைட்டில் இதற்கான படிவங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் படிவம் 16 (Form-16) வழங்கத் தொடங்கியுள்ளன.

வரி செலுத்துவோர் ஜூலை 31, 2026ம் தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை எந்தவிதமான அபராதமும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பல ஊழியர்கள் படிவம் 16-ஐப் பெற்றவுடன் அவசரகதியில் வரி தாக்கலை முடிக்க நினைக்கிறார்கள். ஆனால், வரித் துறை வல்லுநர்கள் இதைச் சரியாகக் கருதவில்லை.
வருமான வரி
படிவம் 16 என்பது உங்கள் நிறுவனம் உங்களுக்கு வழங்கிய சம்பளம் மற்றும் அதிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி (TDS) பற்றிய விவரங்களை மட்டுமே கொண்டிருக்கும். வங்கி வட்டி வருமானம், பங்குச் சந்தை முதலீடுகள், பரஸ்பர நிதி (Mutual Funds) லாபங்கள் அல்லது வீட்டு வாடகை போன்ற கூடுதல் வருமானங்கள் இதில் இடம்பெறாது. எனவே, முழுமையான மற்றும் துல்லியமான விவரங்களை சமர்ப்பிக்க கூடுதல் ஆவணங்களை சேகரிப்பது மிக அவசியம்.
வரி தாக்கலுக்கு தேவையான 5 முக்கிய ஆவணங்களில் முதலாவது, வருடாந்திரத் தகவல் அறிக்கை ஆகும்.. இது வருமான வரித் துறையினரால் தொகுக்கப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும்.
இதில் உங்கள் சேமிப்புக் கணக்கு வட்டி, நிலையான வைப்புத்தொகைகள், பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதி ஈவுத்தொகைகள் மற்றும் குறிப்பிடத்தக்க ரொக்கப் பரிவர்த்தனைகள் துல்லியமாக பதிவாகியிருக்கும். இவற்றை நீங்கள் படிவம் 16-உடன் ஒப்பிட்டுப் பார்ப்பது வரி பிழைகளைத் தவிர்க்க உதவும்.
2வதாக ஆவணம் படிவம்
2வதாக ஆவணம் படிவம் 26AS ஆகும். உங்கள் பான் (PAN) எண்ணின் கீழ் எவ்வளவு வரி பிடிக்கப்பட்டுள்ளது மற்றும் அது சரியாக அரசுக்குச் செலுத்தப்பட்டுவிட்டதா என்பதை இது உறுதி செய்யும்.
3வதாக முதலீட்டுச் சான்றுகள்.. நீங்கள் பழைய வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்திருந்தால், படிவம் 16-இல் இடம்பெறாத LIC காப்பீட்டுத் திட்டங்கள், PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, வீட்டுக் கடன் வட்டி மற்றும் பிரிவு 80D-ன் கீழ் வரும் மருத்துவக் காப்பீடு ரசீதுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
4வதாக, , மூலதன ஆதாய அறிக்கை... பங்குச்சந்தை அல்லது சொத்து விற்பனை மூலம் லாபம் ஈட்டியிருந்தால், அதற்கான முழுமையான அறிக்கையை பங்கு தரகரிடம் பெற்றுத் தாக்கல் செய்ய வேண்டும்.
5வதாக மிக முக்கியமாக உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகள் சரியாக இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பான் மற்றும் ஆதார் அட்டைகள்
வருமான வரித் துறை பல்வேறு வருமான மூலங்களுக்கு ஏற்ப தனித்தனி படிவங்களை வடிவமைத்துள்ளது. ஊதியம் பெறும் தனிநபர்கள் தங்கள் வருமானம் ரூ. 50 லட்சம் வரை இருந்தால் ஐடிஆர்-1 படிவத்தை பயன்படுத்தலாம். ரூ. 50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் அல்லது பங்குச் சந்தை ஆதாயம் கொண்டவர்கள் ஐடிஆர்-2 படிவத்தை தேர்வு செய்ய வேண்டும்.
வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் ஐடிஆர் 3 படிவத்தையும், சிறு வணிகர்கள் ஐடிஆர் 4 படிவத்தையும் நிரப்ப வேண்டும். கூட்டு நிறுவனங்களுக்கு ஐடிஆர் 5 வழங்கப்பட்டுள்ளது. தவறான படிவத்தை தேர்வு செய்வது உங்கள் வரித்தாக்கலை செல்லாததாக்கக்கூடும் என்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, ஜூலை 31-க்குள் சரியான படிவத்தில் வரி தாக்கலைச் செய்து, சிக்கலற்ற வரி நடைமுறையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..!!












Click it and Unblock the Notifications