1 கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம்! முதலமைச்சரிடம் ஸ்கோர் செய்த எர்ணாவூர் நாராயணன்!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கடற்கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி அவரது குட்புக்கில் ஸ்கோர் செய்துவிட்டார் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன். இது தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;

பராமரிப்பில்லாமலேயே காலத்துக்கும் பயன் தரும் மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடையது. நம் மொழியின் அரிய இலக்கியங்களும் சுவடிகள் மூலமே பல நூற்றாண்டுகள் கடத்தப்பட்டன. நுங்கு, பதநீர், பனைமட்டை, நார், ஓலை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு எனப் பனையின் பயன்கள் எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் பனைமரமே விளங்குகிறது.
ஆட்சிக்கு வந்ததும் வேளாண் துறைக்கெனத் தனி நிதிநிலை தாக்கல் செய்த அரசு பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பனை நடுவதை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற பெயரில் தனி இயக்கமே அறிவிக்கப்பட்டு, 30 மாவட்டங்களில் 76 இலட்சம் பனை விதைகளும் 1 இலட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்கப்பட்டது. 2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையின்படி 2.02 கோடி ரூபாயில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது.
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 10 இலட்சம் பனைவிதைகள் 30 இலட்சம் ரூபாயில் வழங்கப்பட்டதோடு, கூடம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் 62 இலட்சம் ரூபாயில் 124 இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் அமைத்தல், 20.40 இலட்சம் ரூபாயில் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிப்பதற்கான கருவிகள் வழங்குதல், 45 இலட்சம் ரூபாய் நிதியில் 1000 பேருக்கு பனைமரம் ஏறுவதற்கான கருவிகள் வழங்குதல், 43.32 இலட்சம் ரூபாய் நிதியில் பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் சார்பில் பனைவெல்லம், பனங்கற்கண்டு, பிற பனைசார் பொருட்களைத் தூய்மையான முறையில் தயாரிப்பதற்கான பயிற்சி மற்றும் மகளிருக்குப் பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்கெல்லாம் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், கலைஞர் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தைத் 'தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்' 01-10-2023 அன்று தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கழக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் இந்த வாரியம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் நியமிக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இவ்வாரியம் - க்ரீன் நீடோ சுற்றுச்சூழலமைப்பு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகிறது. மேலும், சென்னை ஐ.ஐ.டி., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் தன்னார்வலர்களும் இணைந்து ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்தை வெற்றிபெறச் செய்யவுள்ளார்கள் என்பது நெஞ்சுக்கு இதமளிக்கிறது.
தமிழ்ச் சமூகத்துக்கு வாழ்நாள் எல்லாம் பல வகையிலும் பல துறைகளிலும் பயனளித்திட்ட தமிழினத் தலைவர் நூற்றாண்டில் முன்னெடுக்கப்படும் இந்த சீரிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன். இதற்காக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி.கணேசன் அவர்களையும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் திரு. எர்ணாவூர் ஆ.நாராயணன் அவர்களையும் பாராட்டுகிறேன்.












Click it and Unblock the Notifications