அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருக்கே.. செந்தில் பாலாஜி தரப்பு வக்கீலிடம் கேட்ட நீதிபதி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. இதில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கபில் சிபில் வாதம் வைத்து வருகிறார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகள் அமர்வில், எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இது சம்பந்தமாக வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க இந்த அம்சம் குறித்து வாதம் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா?; நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா?; செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என மூன்று கேள்விகளை தீர்மானித்து, விசாரணையை ஜூலை 11, 12ம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது. இதில் 3 -வது நீதிபதி கார்த்திகேயன் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என் ஆர் இளங்கோ, கபில் சிபில் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர். அப்போது செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கபில் சிபில் வாதம் வைத்தார். மேலும் ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள், அதிகாரிகளுக்கு காவல்துறையின் அதிகாரம் வழங்கவில்லை எனவும் கபில் சிபில் வாதாடி வருகிறார். நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்களின் வாதம் பின்வருமாறு :-
கபில் சிபில் :- சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் 19- வது பிரிவின்படி, குற்றம் புரிந்துள்ளார் என நம்புவதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர், உதவி இயக்குனர் கைது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம்.
ஆனால், இந்த வழக்கில், கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறையினர் தெரியப்படுத்தவில்லை. கைதுக்கான எந்த ஆதாரமும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்ற விவரங்களை அவரது உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தவில்லை. இந்த வழக்கில் 2 கேள்விகள் எழுகிறது. ஒன்று கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? மற்றொன்று இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது.இதில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என ஆணித்தரமாக கூறுகிறேன்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பிரிவு 19 படி, கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது. கைது செய்ய அதிகாரம் இல்லை என்கிறீர்களா? அல்லது காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்கிறீர்களா?
கபில் சிபில்:- சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை பொருத்தமட்டில், ஏற்கனவே, செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் போல, அமலாக்கத் துறையினர் செயல்பட முடியாது. சட்டப்படி சம்மன் அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 17, 18- ன் படி அவர்கள் சோதனை செய்து பறிமுதல் செய்யதான் அதிகாரம் உள்ளது. கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை.
நீதிபதி:- நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியுமா?
கபில் சிபில்:- நீதிமன்ற காவலில் வைக்க அதிகாரம் உள்ளது. ஆனால், காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை.
நீதிபதி:- அப்படியானால், கைது செய்வதற்கு முன்பு வரை வைத்துள்ள ஆதாரங்களே போதுமானது. கைதுக்கு பின், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என்கிறீர்களா?
கபில் சிபில்:- ஆமாம். செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடைமுறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தது தவறானது. கிரிமினல் நடைமுறைச் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சி.ஆர்.பி.சி சட்டத்தின் படி, அதிகாரத்தை எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை" என்றார். இவ்வாறு பரபரப்பான வாதங்கள் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications