அடமானம் வைத்த தங்க நகை.. கிழிக்கப்பட்ட கடன் ரசீது! ஏற்காடு கூட்டுறவு வங்கியில் இப்படியும் நடக்குமா?
சென்னை: நகை அடமானம் வைக்கும்போது, வங்கியின் வட்டி விகிதம், கடன் காலம், அபராத கட்டணங்கள் போன்றவற்றை தெளிவாக கேட்டறிய வேண்டும். நகையை பாதுகாப்பாக வைத்திருப்பார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில் ஏற்காட்டில் நடந்த சம்பவம் பலரது கவனத்தை பெற்று வருகிறது.
LAMPPS எனப்படும் மலைவாழ் மக்கள் சங்கம் என்பது மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு உதவி மையம் போன்றது. மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தை அந்த ஊர் மக்கள் ஒருங்கிணைந்து நடத்துவார்கள்..

மலைவாழ் மக்கள் காடுகளில் தேன் அல்லது காய்கனிகளை சேகரிப்பார்கள் அல்லது விவசாயம் செய்வார்கள். முன்பு இவர்களிடம் வியாபாரிகள் மிகக்குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி ஏமாற்றி வந்தனர். இதை தடுப்பதற்காகத்தான் இந்த சங்கம் தொடங்கப்பட்டது.
கூட்டுறவு சங்கம் - தங்க நகை
அவர்களுக்குத் தேவையான பணம் மற்றும் பொருட்களை ஒரே இடத்தில் வழங்க உருவாக்கப்பட்ட அரசு சார்ந்த கூட்டுறவு அமைப்புதான் இது. ரேஷன் பொருட்கள், உரம் மற்றும் மளிகைப் பொருட்களை அவர்களது இடத்திலேயே கிடைக்கும்படி செய்யும்.
இதில் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். விவசாயிகள் விதை, உரம் போன்றவற்றை வாங்க இந்த சங்கத்தின் உதவியைப் பெறலாம். குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். அவர்களுக்கு விவசாயம் செய்யவோ அல்லது அவசர தேவைகளுக்கோ குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.
சிலர் சிறிய தொழில்கள் தொடங்க விரும்பினால் பயிற்சி தரப்படுகிறது. இதனால் மக்கள் பணம் சேமிக்க, தொழில் வளர்க்க, மற்றும் வாழ்க்கை சுலபமாக்க உதவுகிறது.
ஏற்காடு பல்நோக்கு கூட்டுறவு சங்கம்
இப்படிப்பட்ட சூழலில், ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் ஒரு குழப்பமான சம்பவம் நடந்துள்ளது.
கொண்டையனூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர், ஒரு வருடத்திற்கு முன்பு தனது 5 பவுன் தங்க சங்கிலியை ரூ.1.50 லட்சம் கடன் பெறுவதற்காக சங்கத்தில் அடமானம் வைத்திருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்பு, அவர் நகைக்கு வட்டி பணம் செலுத்தி, தன்னுடைய நகையை திரும்ப பெறுவதற்காக சங்க அலுவலகத்திற்கு சென்றார்.
தங்க நகை அடகு ரசீது
அவர் அடகு ரசீதை காட்டியபோது, சங்க ஊழியர்கள், "இந்த நகை ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.. இதை கேட்டதுமே ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே இந்த தகவலை தன்னுடைய குடும்பத்தினரிடமும் தெரிவித்தார்.
இதைக்கேட்டு கோபமடைந்த குடும்பத்தினர், உடனே சங்கத்திற்கு கிளம்பி வந்து, நகையை யாரிடம் கொடுத்தீர்கள்? என்று ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.. இதுவே மிகப்பெரிய விவகாரமாகவும் வெடித்தது..
அப்போதுதான் இதுகுறித்த விசாரணையில், சங்கத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதம் தவறுதலாக அதே ஊரில் வசிக்கும் வேறு ஒருவருக்கு சென்றது தெரியவந்தது. அந்த நபரும் ராமசாமி என்ற பெயருடையவர்தானாம்..
அடமானம் நகைகள்
அந்த கடிதத்தை நம்பிய ராமசாமி, சங்கத்திற்கு வந்து, தங்க சங்கிலியை வாங்கி சென்றுள்ளார். இதற்கு பிறகுதான், சங்க ஊழியர்கள் அந்த ராமசாமி யார் என்பதை கண்டுபிடித்தனர்.. விவரத்தை சொல்லி அடகு வைத்த நகையையும் அவரிடமிருந்து திரும்பப் பெற்றனர்.
பிறகு நகை உரிமையாளர், அந்த நகையை சங்கத்தில் மீண்டும் அடமானம் வைக்கும்படி சொன்னார்.. ஆனால், சங்கத்தில் தற்போது பணமில்லை, நீங்கள் கட்டவேண்டிய முழு பணத்தையும் கட்டிவிட்டு நகையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.. அதற்கு பணத்தை எடுத்து வருவதாக கூறி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் திரும்பி சென்றுள்ளனர்..
ஆனால் அடகு வைத்த நகையை, எந்த ஆதாரமும் இல்லாமல், தவறுதலாக வேறு ஒருவருக்கு கொடுத்து, சங்க அதிகாரிகள் குளறுபடி செய்ததால், சம்பந்தப்பட்ட ராமசாமி குடும்பத்தினர் மிகுந்து அவதிக்கு ஆளாகிவிட்டார்களாம்..!












Click it and Unblock the Notifications