சொந்த வீடு உங்கள் நீண்ட நாள் கனவா? PMAY திட்டத்தில் ரூ.2.67 லட்சம் மானியம்! எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு 2.67 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்குகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலில் உள்ள நிலையில், புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்..
வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. குறிப்பாக ஏழை, எளிய குடும்பங்கள் தங்களுக்கென ஒரு சிறிய வீடு அமைத்துக் கொள்ளும் ஆசை நிறைவேறுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' (Pradhan Mantri Awas Yojana - PMAY) திட்டம்.
இந்த திட்டம் 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் 2024க்குள் இந்தியாவில் வீடற்றோர் யாரும் இருக்கக் கூடாது என்பதே. இந்த திட்டத்தின் மூலம் வீடில்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட அரசு மானிய உதவி வழங்குகிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்கள் ரூ. 2.67 லட்சம் வரை மானியம் பெறலாம். இதில், மத்திய அரசு ரூ.1.50 லட்சம் வழங்குகிறது. மாநில அரசுகள் கூடுதலாக ரூ.1 லட்சம் வரை வழங்குகின்றன. இதனால் மொத்தம் ரூ.2.5 லட்சம் முதல் 2.67 லட்சம் வரை அரசு உதவி கிடைக்கும். இந்த மானியம் மூன்று தவணைகளாக வழங்கப்படும். முதற்கட்டமாக ரூ.50,000 வழங்கப்படும். வீட்டு அடித்தளம் முடிந்த பின் இரண்டாவது தவணையாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும். வீடு முழுமையாக கட்டி முடித்த பிறகு இறுதி தவணையாக ரூ.50,000 வழங்கப்படும்.
2.67 லட்சம் மானியம்
இந்த திட்டம் ஏழை, குறைந்த வருமானக் குடும்பங்களை இலக்காகக் கொண்டது. எனவே, ஏற்கனவே வீடு வைத்திருக்கும் குடும்பங்கள் அல்லது வீட்டில் ஒருவர் கூட சொந்த வீடு வைத்திருந்தால் அவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவர். வீடு இல்லாத குடும்பங்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும். இந்த திட்டத்தின் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் எளிதாக பதிவு செய்யலாம். அதற்காக மத்திய அரசு https://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை தொடங்கியுள்ளது.
மத்திய அரசு வீட்டு திட்டம்
இந்த இணையதளத்தில் 'Citizen Assessment' என்ற பகுதியில் சென்று, ஆதார் எண்ணை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு பெயர், முகவரி, குடும்ப விவரங்கள், நில விவரங்கள் போன்றவற்றை நிரப்பி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களில் ஆதார் கார்டு, வங்கி கணக்கு விவரம், நிலம் சம்பந்தப்பட்ட ஆவணம் (பட்டா, சிட்டா), வருமானச் சான்று மற்றும் குடும்பத்தலைவர் புகைப்படம் ஆகியவை அடங்கும்.
பிஎம்ஏஒயு திட்டம்
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், வீட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கிய பின், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மானிய தொகையை நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தும். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கென வீடு அமைத்துள்ளனர். தமிழகத்திலும் பல லட்சம் குடும்பங்கள் இதன் பயனடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications