விவசாயிகளுக்கு இனி 12,000 ரூபாய்.. மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் அதிரடி அறிவிப்பு?
சென்னை: 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆண்டுத் தொகை ரூ.12000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலை மனதில் வைத்து விவசாயிகள், பெண்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றால் விவசாயிகளின் சராசரி வருமானத்தை நிச்சயமாக இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த வாக்குறுதியின் பேரில் தான் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே தங்களின் ஓட்டுக்களை அளித்து அமோக வெற்றிபெற வைத்தனர். இரண்டாவது முறையாக நரேந்தி மோடியே மீண்டும் பிரதமராக பதவியில் அமர்ந்த உடனே விவசாயிகளுக்கு ஏற்கனவே அளித்து வந்த 6000 ரூபாய் உதவித் தொகையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டு செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் மோடி. அவர் சொன்னது போலவே கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.6000 மானிய உதவித் தொகை வழங்கும் பி எம்-கிஷான் திட்டத்தை கொண்டு வந்தார்.
இரண்டாவது முறையாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, பிஎம்-கிஷான் திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவு படுத்த உத்தரவிட்டு கையெழுத்திட்டார் மோடி. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 14.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து
வருகிறது.
இந்த நிலையில்தான் 2024- 25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இருந்தாலும் இந்த முறை பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் பல நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆண்டுத் தொகை இந்த பட்ஜெட்டில் ரூ.12000 ஆக உயர்த்தப்படலாம் என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் ரூ.2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாயாகவோ அல்லது மாதம் 1000 ரூபாய் ஆகவோ விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அது மட்டுமில்லாமல், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் மீது அரசு கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications