இலவச பஸ் பயணத்தை விமர்சித்த மோடி.. ஆனாலும் சென்னை மெட்ரோ எப்படி லாபகரமாக இயங்குகிறது?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் இலவச பேருந்து பயணம் மெட்ரோ ரயில்களின் லாபத்தைப் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று விளக்கி இருப்பார். ஆனால், சென்னை மெட்ரோ அந்தத் தடையைத் தாண்டி எப்படிச் சாதிக்கிறது என்பதற்கான பின்னணி இந்த பதிவில் பார்ப்போம். இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்தால் சென்னை மெட்ரோ இந்தியாவிலேயே எப்படி முதலிடம் பிடிக்கும் என்பதையும் பார்ப்போம்.
பிரதமர் மோடி பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறும் போது, இப்போது பாருங்கள் என்ன நடக்கிறது என்று.. நீங்கள் ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் சேவையை உருவாக்குகிறீர்கள்.. ஆனால் அதே நகரத்தில் பெண்களுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் வழங்குவோம் என்று சொல்கிறீர்கள்..

மெட்ரோ எப்படி உருவாகும்
அதாவது, உங்கள் மெட்ரோவின் 50 சதவீதப் பயணிகளை நீங்கள் பறித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.. மெட்ரோ லாபகரமாக இயங்காது. எதிர்காலத்தில் மெட்ரோ எப்படி உருவாகும்? இதுதான் என் கவலை. இந்த கோணத்தில் யாருமே சிந்திப்பதோ அல்லது விவாதிப்பதோ இல்லை.. நாம் எப்போதும் அரசியல் ரீதியான வாக்குவாதங்களில் இறங்கி விடுகிறோம். எனக்கு அது பிடிக்காது..
நாடு எப்படி முன்னேறும்
நான் மிகத்தெளிவான ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.. பேருந்துகளில் இவ்வாறு செய்வதால் ஒருபுறம் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. மறுபுறும் மெட்ரோவையும் காலி செய்துவிடுகிறீர்கள்.. இப்போது அந்த மெட்ரோ எப்படி முன்னேறும்.. நாடு எப்படி முன்னேறும்" என்று பிரதமர் நரேந்திர மோடி அந்த வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
பிரதமர் மோடி சொல்வது உண்மை
பிரதமர் நரேந்திர மோடி சொல்வதில் நிச்சயம் உண்மை இருக்கிறது. ஏனெனில் பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இன்னும் லாபகரமாக மாறவில்லை.. ஹைதராபாத் மாதிரி பெரிய மெட்ரோ நகரங்களே லாபம் எடுக்க முடியாமல் திணறுகின்றன. அதேபோல் என்னதான் பெங்களூர் மெட்ரோ லாபகரமாக இயங்கினால் சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மெட்ரோ ரயில் கட்டணம் இல்லை. பெங்களூரை பொறுத்தவரை கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரம், புறநகர் ரயில் வழித்தடங்கள் இல்லாத நகரம்.. இதனால் விழிப்பிதுங்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வேறுவழியே இல்லாமல் தான் ஐடி ஊழியர்கள் பெங்களூர் மெட்ரோவில் பயணிக்கிறார்கள்.
சென்னை விதிவிலக்கானது
ஆனால் சென்னை மட்டுமே விதிவிலக்கானது. ஏனெனில் சென்னையில் இலவச பேருந்து பயணம் என்பது மகளிருக்கு எல்லா வழித்தடங்களிலும் உள்ளது. வெறும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் சென்னைக்குள் மின்சார ரயிலில் ஏறி போய்விடலாம். சென்னையில் 10 ரூபாய் இருந்தாலே செங்கல்பட்டு போய்விடலாம். அதேபோல் ஆவடி தாண்டி போகமுடியும். சென்னையில் நான்கு பக்கமும் மின்சார ரயில்கள் ஓடுகிறது. இந்த கட்டமைப்புகளுக்கு நடுவில் தான் சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடுகிறது. ஆனால் சென்னை மெட்ரோ உண்மையில் லாபகரமானதாக இயங்கி வருகிறது.
சென்னை மெட்ரோ புள்ளி விவரம்
மலிவான மின்சார ரயில் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து இருந்தபோதிலும், சென்னை மெட்ரோவின் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2022-23ம் ஆண்டு காலக்கட்டத்தில் 7.07 கோடி பயணிகள் பயணித்தனர். 2023-24ம் ஆண்டில் 9.71 கோடி பயணிகள் (சுமார் 37% வளர்ச்சி) பயணித்தனர். தற்போது சராசரி தினசரி பயணிகள் எண்ணிக்கை 4.26 லட்சத்தை கடந்துவிட்டது.
சென்னை மெட்ரோ சக்சஸ் எப்படி
சென்னை மெட்ரோ ரயில்கள் சக்சஸ் பார்முலாவிற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கிறது.. ஏனெனில் இலவச பேருந்து பயணம் என்பது முற்றிலும் ஏழைக்களுக்கானதாக இருக்கிறது. இதில் , "நேரம் பொன்னானது" என நினைக்கும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் பயணிக்க விரும்புவது இல்லை.. மெட்ரோவையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் நிறுவனம்
சென்னை மெட்ரோவின் லாபத்திற்குப் பின்னால் இருப்பது வெறும் பயணக் கட்டணம் மட்டுமல்ல. சென்னை மெட்ரோ நிறுவனம் ஒரு ரயில் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனமாக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் மிகப்பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமாகவும் இருக்கிறது. அத்தனை ரியல் எஸ்டேட் கட்டமைப்புகளை சென்னை மாநகரம் முழுக்க உருவாக்கி வருகிறது. வணிக ரீதியான அடுக்குமாடிகள் எல்லா பகுதிகளிலும் உலகத்தரத்தில் உருவாக்கி வருகிறது. 2024-25 நிதியாண்டில் மார்ச் வரை சென்னை மெட்ரோ ஈட்டிய வருவாய் சுமார் ₹624 கோடியாகும்
மெட்ரோ நிலையங்களில் கடைகள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், உணவகங்கள், ஏடிஎம்கள் மற்றும் அலுவலக இடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் பெரும் லாபம் ஈட்டி வருகிறது சென்னை மெட்ரோ நிறுவனம். அதேபோல் ரயில் பெட்டிகள் மற்றும் நிலையங்களில் டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம் 25% முதல் 30% வரை வருமானம் ஈட்டப்படுகிறது.
மின்சார ரயில்
மின்சார ரயில் கட்டணம் மிகக் குறைவு (₹5 - ₹20). ஆனால் மெட்ரோவின் அதிகபட்ச கட்டணம் ₹50. எப்படி மக்கள் மெட்ரோவுக்கு வருகிறார்கள்? என்ற கேள்வி எழும். சென்னை மெட்ரோ, சென்னையின் முக்கிய இடங்களான சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை மெட்ரோ நேரடியாக இணைக்கிறது. மின்சார ரயிலில் இந்த "முழுமையான இணைப்பு" குறைவாகவே இருக்கிறது. அதேபோல் மின்சார ரயில்கள் தாமதமாகலாம். ஆனால் மெட்ரோ தாதமம் என்றே பேச்சுக்கே இடமில்லை. 5 நிமிட இடைவெளியில் மிகத் துல்லியமாக இயங்கி வருகிறது.
பெங்களூர் மெட்ரோ கட்டணம்
பெங்களூரு மெட்ரோவுடன் ஒப்பிட்டோம் என்றால், பெங்களூரு மெட்ரோவின் அதிகபட்ச கட்டணம் ₹95. சென்னையின் அதிகபட்ச கட்டணம் வெறும் ₹50 மட்டுமே இருக்கிறது. சென்னையில் மெட்ரோவிற்கு 'சிங்கார சென்னை' கார்டு அல்லது QR கோடு பயன்படுத்தினால் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கட்டணத்தைக் குறைவாக வைத்தும், பயணிகளை ஈர்ப்பதன் மூலமே சென்னை மெட்ரோ லாபம் ஈட்டுகிறது.
சென்னையில் பாதிப்பு இல்லை ஏன்
அதேபோல் பிரதமரின் கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் இலவச பேருந்துத் திட்டத்தால் மெட்ரோவுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. இலவச பேருந்து சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே உண்டு. மெட்ரோவைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும்பாலும் சொகுசு மற்றும் வேகமான பயணத்தை விரும்புபவர்கள். இவர்கள் பேருந்துக்கு மாறுவதை ஏற்கவே மாட்டார்கள். இப்போது பஸ் ஸ்டாண்ட் வரை இலவச பஸ்ஸில் வந்துவிட்டு, அங்கிருந்து நீண்ட தூரத்திற்கு மெட்ரோவைப் பயன்படுத்தும் புதிய பழக்கம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் நீளமான மெட்ரோ
சென்னையில் இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்தால் சென்னை மெட்ரோ இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கும். கிட்டத்தட்ட தங்க முட்டை போடும் வாத்து போன்றது சென்னை மெட்ரோ எப்படி என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம். சென்னை மெட்ரோவில் இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்தால் இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ வழித்தடங்களில் ஒன்றாக மாறும்.
சென்னையில் கிரிட் முறை
தற்போது சென்னையில் இருப்பது வெறும் 54 கி.மீ. ஆனால் இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக 118.9 கி.மீ கட்டப்பட்டு வருகிறது. இது முழுமையடையும் போது மொத்த நீளம் சுமார் 173 கி.மீ ஆக உயரும். இதன் மூலம் டெல்லிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ வலையமைப்புகளில் ஒன்றாகச் சென்னை மாறும். பெங்களூருவின் தற்போதைய வேகத்தை விடச் சென்னையின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் மிகத் திட்டமிட்ட "கிரிட்" முறையில் இருக்கிறது.
'ஓ.எம்.ஆர்' ஐடி காரிடார் இணைப்பு
இதுதான் சென்னை மெட்ரோவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகும். பெங்களூருவில் ஐடி காரிடார்களுக்கு மெட்ரோ செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால் சென்னை இரண்டாம் கட்டத்தில், மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முழுமையாக மெட்ரோ செல்கிறது. இந்தப் பகுதியில் மட்டும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மெட்ரோவுக்கு மாறும்போது, பயணிகளின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயரும்.
மூன்று முக்கிய முனையங்களின் இணைப்பு
சென்னையின் இரண்டாம் கட்டம் நகரின் மூன்று முனைகளை இணைக்கிறது:
மாதவரம் (வடக்கு): புதிய பேருந்து முனையம்.
சிறுசேரி (தெற்கு): ஐடி காரிடார்.
பூந்தமல்லி (மேற்கு): வேகமாக வளர்ந்து வரும் தொழிற்சாலைப் பகுதி.
இந்த மூன்று திசைகளையும் இணைக்கும் ஒரே மெட்ரோவாகச் சென்னை இருக்கும். இது போன்ற "முழுமையான கவரேஜ்" டெல்லிக்கு அடுத்தபடியாகச் சென்னையில் தான் மிகச் சிறப்பாக அமைய இருக்கிறது.
மல்டி-மாடல் இன்டகிரேஷன்
சென்னை மெட்ரோவின் பலமே மற்ற போக்குவரத்துகளுடன் இணைவதுதான். இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் முடியும்போது, சென்னை மெட்ரோவானது புறநகர் ரயில், பறக்கும் ரயில், மாநகரப் பேருந்துகள் மற்றும் தென் மாவட்டப் பேருந்துகள் என அனைத்தையும் ஒரே சங்கிலியில் பிணைக்கும்.
சென்னை மெட்ரோ கில்லாடி
பெங்களூருவில் மெட்ரோவுக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே நடப்பதே ஒரு சவாலாக இருக்கும் சூழலில், சென்னையின் இந்த ஒருங்கிணைப்பு பயணிகளை அள்ளிவிடும். சென்னை மெட்ரோவிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. எனவேநிதி அழுத்தம் குறைவு. அத்துடுடன் சென்னை மெட்ரோ இயக்க லாபத்தை ஈட்டுவதில் கில்லாடியாக இருக்கிறது. தன்னாட்சி நிறுவனமாக சென்னை மெட்ரோ இருப்பதால் அரசின் தலையீட்டிற்கு வாய்ப்பே இல்லை..
இந்தியாவிலேயே முதலிடம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் டிரைவர்கள் இல்லாமல் ரயில்களாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இது மனித ஆற்றல் செலவைக் குறைத்து, லாபத்தை மேலும் அதிகரிக்கும். இப்போது சென்னையில் தினசரி 4.5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இரண்டாம் கட்டம் முடிந்தால் இது 15 முதல் 20 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே சென்னை மெட்ரோ என்பது தங்க முட்டை போடும் வாத்து தான். இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்தால் சென்னை மெட்ரோ இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கும் என்று கணிப்புகள் உள்ளன.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications